நிகழாண்டில் இதுவரை 9 பேருக்கு டெங்கு: எஸ்டிஎம்சி தகவல்
By DIN | Published On : 15th May 2019 07:04 AM | Last Updated : 15th May 2019 07:04 AM | அ+அ அ- |

தில்லியில் நிகழாண்டில் இதுவரை ஒன்பது பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நீரின் மூலம் பரவக்கூடிய இந்த நோய் குறித்த அண்மைக் கால புள்ளி விவர தகவலின்படி, மே மாதத்தில் ஒருவர், ஏப்ரலில் 2 பேர், மார்ச் மாதத்தில் நான்கு பேர், ஜனவரி, பிப்ரவரியில் தலா ஒருவர் என மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயின் தாக்கம் வழக்கமாக ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் இருக்கும். டிசம்பர் வரை அதன் தாக்கம் நீடிக்கும். நிகழாண்டு மே 11-ஆம் தேதி வரையிலான காலத்தில் மலேரியா நோயால் 4 பேரும், சிக்குன் குனியா நோயால் 5 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) வெளியிட்ட புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு தில்லியில் 2,798 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நான்கு பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் சிறார் ஆவார். தெற்கு தில்லி மாநகராட்சி தகவலின்படி தில்லியில் 2017-இல் டெங்கு நோயால் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் தில்லிவாசிகள். அந்த ஆண்டில் இந்நோயால் 9,271 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நோய்க்குக் காரணமான கொசுக்களின் உற்பத்தி 8,546 வீடுகளில் இருந்ததாகவும், 10,780 சட்டப்பூர்வ நோட்டீஸ்கள் நிகழாண்டில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தகவல் தெரிவிக்கிறது.
கொசு உற்பத்தியை ஏற்படுத்தாமல் இருக்க வீடுகளில் கவனம் செலுத்தாமல் இருந்தமைக்காக குறைந்தபட்சம் 452 குடியிருப்பு வாசிகளுக்கு அபராத நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.1, 79, 570 அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தத் தொகையானது வீடுகளில் கொசுக்களை ஒழிப்பதற்காக பயன்படுத்தும் மருந்துகளுக்காக "நிர்வாக கட்டணமாக' வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் தில்லியில் 473 மலேரியா பாதிப்புகளும், 165 சிக்குன்குனியா பாதிப்புகளும் பதிவாகியிருந்தது. வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பயன்படுத்தப்படாத வாட்டர் கூலர்களை தண்ணீர் இன்றி வைத்திருக்குமாறும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.