மகளை "ஈவ் டீசிங்' செய்தவரை தட்டிக் கேட்ட தந்தை படுகொலை: தலைவர்கள் கண்டனம்
By DIN | Published On : 15th May 2019 07:03 AM | Last Updated : 15th May 2019 07:03 AM | அ+அ அ- |

மகளை ஈவ் டீசிங் செய்தவரை தட்டிக் கேட்ட தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தில்லி மோதி நகரைச் சேர்ந்தவர் துருவ் தியாகி. இவரது மகளை, முகமது அலாம் என்பவர் ஈவ்டீசிங் செய்துள்ளார். இதை துருவ் தியாகி தட்டிக் கேட்டபோது, முகமது அலாம், அவருடைய தந்தை ஜஹாங்கீர் கானும் ஆகியோர் சேர்ந்து தியாகியை கொடூரமாக தாக்கியதுடன் கத்தியால் குத்தினர்.
துருவ் தியாகியை காப்பாற்றுவதற்காக வந்த அவரது மகனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துருவ் தியாகி, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுதொடர்பாக முகமது அலாம், அவரது தந்தை, இரு சகோதரர்கள் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதல்வர் வலியுறுத்தல்: இச்சம்பவம் குறித்து முதல்வர் கேஜரிவால் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "கொலையாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
தகுந்த தண்டனை: தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "தலைநகர் தில்லியில் நடந்துள்ள இந்தச் சம்பவத்தால் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். சமுதாயத்தில் ரௌடித் தனத்தை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தில்லி அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.
டிசிடபிள்யூ நோட்டீஸ்: இச்சம்பவம் தொடர்பாக தில்லி காவல்துறைக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மகளை ஈவ் டீசிங் செய்தவரை தட்டிக் கேட்ட தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொலையில் தொடர்புடையவர்கள் மீது ஏற்கெனவே ஈவ் டீசிங் உள்ளிட்ட புகார்கள் உள்ளனவா? இச்சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரங்களை தில்லி மகளிர் ஆணையத்திடம் காவல்துறை அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கருத்து: இதனிடையே, இந்த சம்பவத்துக்கு மதச் சாயம் பூச சில சக்திகள் முயலுவதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஈவ்டீசிங்கை தட்டிக் கேட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மதச் சாயம் பூச சிலர் முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. ஏற்றுக் கொள்ள முடியாதது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆம் ஆத்மி ஆதரவாக இருக்கும் என்றார்.