தில்லியில் தங்கையின் கணவரை கெளரவக் கொலை செய்ய முயன்றதாக, சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:
ஹஸ்த்சால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நீரஜ் (32), நிதின் (28). இவர்களின் சகோதரி குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீரஜ் மற்றும் நிதின் சகோதரியின் கணவரை கெளரவக் கொலை செய்ய முயன்றனர்.
உடற்கட்டு பயிற்சியாளராக இருக்கும் தங்கையின் கணவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பர்களுடன் நடத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நீரஜ் மற்றும் நிதின் அவரை துப்பாக்கியால் சுட்டனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற அவரது வலது கையில் தோட்டா துளைத்தது.
நிலைதடுமாறி கீழ விழுந்த அவரை, நீரஜ் மற்றும் நிதின் சரமாரியாக தாக்கினர். இதற்குள்ளாக துப்பாக்கி தோட்டா சத்தம் கேட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸார் வருவதைக் கண்ட சகோதரர்கள் இருவரும் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நீரஜ் மற்றும் நிதின் இருவரும் குருகிராமில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.