தில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு தோல்வி! கேஜரிவால் சூசகம்
By DIN | Published On : 19th May 2019 03:26 AM | Last Updated : 19th May 2019 03:26 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடையும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய நலனுக்காக மோடி அரசை மாற்ற வேண்டும் என்றும், அதற்கு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பது அவசியம் என்றும் கூறி காங்கிரஸுடன் தில்லியிலும் அண்டை மாநிலங்களிலும் கூட்டணி வைக்க ஆம் ஆத்மி முனைப்பு காட்டியது.
ஆனால், அந்தக் கூட்டணி சாத்தியப்படவில்லை. இதைத் தொடர்ந்து, இரண்டு கட்சிகளும் தில்லியில் தனித் தனியாகப் போட்டியிட்டன.
இந்நிலையில், தில்லியில் ஆம் ஆத்மிக்கு கிடைக்க வேண்டிய முஸ்லிம் மக்களின் வாக்குகள் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சென்றுள்ளன என்றும், இதனால் ஆம் ஆத்மி தில்லியில் தோல்வியடையலாம் என்றும் மறைமுகமாக கேஜரிவால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பிரபல ஆங்கில மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், "மக்களவைத் தேர்தலுக்கு சுமார் 48 மணி நேரம் முன்பு வரை தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டன.
தில்லியில் சுமார் 12-13 சதவீதம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன. இந்நிலையில், என்ன நடந்தது என்பது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
பாஜக சாடல்: இதற்கிடையே, மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காரணம் தேடும் முயற்சிகளில் கேஜரிவால் ஈடுபட்டுள்ளார் என்று தில்லி பாஜக கடுமையாகச் சாடியுள்ளது.
இதுதொடர்பாக பாஜகவின் தில்லி பொதுச் செயலர் குல்ஜீத் சிங் சாஹல் கூறுகையில், "நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்தனர்.
வரும் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது, தில்லியில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைவது தெரிய வரும். தற்போது தேர்தல் தோல்விக்கு காரணம் தேடும் முயற்சியில் கேஜரிவால் ஈடுபட்டுள்ளார்' என்றார்.
காங்கிரஸ் கருத்து: தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஷீலா தீட்சித் கூறுகையில் "கேஜரிவால் என்ன கூற வருகிறார் என்பது புரியவில்லை.
ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கும் உரிமையுள்ளது. அவர் ஆட்சி செய்யும் முறை தில்லி மக்களுக்குப் பிடிக்கவில்லை' என்றார்.