மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு புதிய ஆட்டோ கட்டணம் அமல்
By DIN | Published On : 19th May 2019 03:29 AM | Last Updated : 19th May 2019 03:29 AM | அ+அ அ- |

தலைநகர் தில்லியில் மக்களவைத் தேர்தல் நெறிமுறைகள் முடிவுக்கு வந்த பிறகு, திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் அமல்படுத்தப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் சுமார் 90,000 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு, ஆட்டோ கட்டணத்தை உயர்த்த அதன் ஓட்டுநர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று ஆட்டோ கட்டணத்தை உயர்த்த தில்லி அரசு முடிவு செய்தது.
இது தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்டது. புதிய ஆட்டோ கட்டணம் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு அமல்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை தொடங்கும்படி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தில்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
தலைநகரில் ஆட்டோ கட்டண உயர்வுக்கு தில்லி அரசு கடந்த மார்ச் 8-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்தன. எனவே தேர்தல் முடிந்த பிறகு ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டு, உயர்த்தப்பட்ட கட்டணம் அமல்படுத்தப்படவுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஒருவாரத்தில் திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் அமல்படுத்தப்படும். ஆட்டோக்களில் உள்ள மீட்டரிலும் திருத்தப்பட்ட கட்டணத்துக்கு ஏற்ப சரி செய்ய வேண்டியுள்ளது.
தில்லி ஆட்டோக்களில் தற்போது கிலோ மீட்டருக்கு ரூ.8 வீதம் வசூலிக்கப்படுகிறது. புதிய கட்டணத்தின்படி, ஒரு கிலோமீட்டருக்கு ஆட்டோ கட்டணம் ரூ.9.50 ஆக இருக்கும். மேலும், முதல் இரண்டு கிலோமீட்டருக்கு அடிப்படை கட்டணம் தற்போது ரூ.25 ஆக உள்ளது. இது தற்போது 1.50 கிலோமீட்டருக்கு ரூ.25 என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ கட்டண உயர்வை அமல்படுத்தும் வகையில், மக்களவைத் தேர்தல் முடிந்ததும் அறிவிக்கை வெளியிட தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டணம் தொடர்பான அறிவிக்கையை வெளியிட துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய கட்டண விகிதங்களுக்கு ஏற்ப ஆட்டோ கட்டண மீட்டர்களிலும் தகுந்த மாற்றங்களை செய்து கொள்ளுமாறு ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.