மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி மனு
By DIN | Published On : 19th May 2019 03:25 AM | Last Updated : 19th May 2019 03:25 AM | அ+அ அ- |

தெற்கு தில்லியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையங்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்வீர் சிங்கை ஆம் ஆத்மி கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 12 -ஆம் தேதி தில்லியில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அவற்றுக்காக அமைக்கப்பட்ட மையங்களில் பலத்த பாதுகாப்புக்கிடையே வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மையங்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மியின் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராகவ் சத்தா, மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையம், தில்லி தலைமைத் தேர்தல் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்துள்ளனர்.
பின்னர், ராகவ் சத்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் தொடர்பாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அந்த மையங்களுக்குள் இனந்தெரியாத மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைச் செய்வார்களோ என்ற சந்தேகம் உள்ளது.
மேலும், புதிய ஆவணங்களைத் தயார்படுத்துமாறு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையம், தில்லி தலைமைத் தேர்தல் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்துள்ளோம். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவரை உறுதியளித்துள்ளன' என்றார்.
தேர்தல் அலுவலகம் மறுப்பு: இதற்கிடையே, தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ராகவ் சத்தா கூறிய புகாரை தில்லி தலைமை தேர்தல் அலுவலகம் மறுத்துள்ளது.
இது குறித்து தில்லி தலைமை தேர்தல் அலுவலக அதிகாரி கூறியதாவது:
தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ராகவ் சத்தா கூறுவது போல எந்தவொரு அதிகாரியும் அழைக்கப்படவில்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டுகள் (விவிபிஏடி) வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவற்றைக் கண்காணிக்கும் வகையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் தில்லி காவல்துறையும், இரண்டாவது அடுக்கில் ஆயுதம் தாங்கிய காவலர்களும், மூன்றாவது அடுக்கில் மத்திய ஆயுத காவல் படையினரும் (சிஏபிஎஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெற்கு தில்லி உள்பட தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய படிவம் வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.
வாக்கு எண்ணும் மையங்கள் விவரம்
தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களையும் தில்லி தலைமைத் தேர்தல் அலுவலகம் மீண்டும் தெரிவித்துள்ளது.
இதன்படி, சாந்தினி செளக் மக்களவைத் தொகுதி வாக்குகள் பாரத் நகர் எஸ்கேவி பள்ளியிலும், வட கிழக்கு தில்லி தொகுதி வாக்குகள் நந்த் நகரியில் உள்ள ஐஐடியிலும், கிழக்கு தில்லியில் பதிவான வாக்குகள் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் உள்ள பேட்மின்டன் மைதானத்திலும் எண்ணுவதற்காக வைக்கப்பட்டுள்ளன.
புது தில்லி தொகுதி வாக்குகள் கோல் மார்க்கெட்டில் உள்ள நகர் பாலிக்கா வங்காளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வட மேற்கு தில்லி தொகுதி வாக்குகள் ஷாபாத் தெளலத்பூரில் உள்ள தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் (டிடியு), மேற்கு தில்லி தொகுதி வாக்குகள் ரோஹிணி செக்டார் 9-இல் உள்ள ஐஐடியிலும், தெற்கு தில்லி தொகுதி வாக்குகள் ஸிரிஃபோர்ட் பகுதியில் ஆகஸ்ட் கிராந்தி மார்கில் உள்ள ஜிஜாபாய் மகளிர் ஐடியிலும் எண்ணுவதற்காக வைக்கப்பட்டுள்ளன.