ஷீலா தீட்சித்தை சந்தித்து ஆசி பெற்ற மனோஜ் திவாரி!
By DIN | Published On : 26th May 2019 01:10 AM | Last Updated : 26th May 2019 01:11 AM | அ+அ அ- |

காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித்தை, வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மனோஜ் திவாரி சனிக்கிழமை சந்தித்து ஆசி பெற்றார்.
வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் போட்டியிட்டார்.
இருகட்சிகளின் தலைவர்களும் நேருக்கு நேர் களம் கண்ட இத்தொகுதியின் முடிவுகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். முடிவில், 3.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மனோஜ் திவாரி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று ஷீலா தீட்சித்தை அவரது இல்லத்தில் சந்தித்து மனோஜ் திவாரி ஆசி பெற்றார்.
இது தொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறுகையில், ஷீலா தீட்சித் மீது மனோஜ் திவாரி எப்போதும் மரியாதை வைத்துள்ளார். மரியாதை நிமித்தம் ஷீலா தீட்சித்தை அவர் சந்தித்தார். வயதில் மூத்தவர் என்பதால் அவரிடம் ஆசி பெற்றார்' என்றனர்.