தில்லியில் இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சிஇன்று தொடக்கம்
By DIN | Published On : 14th November 2019 05:10 AM | Last Updated : 14th November 2019 05:10 AM | அ+அ அ- |

இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சி தில்லியில் வியாழக்கிழமை (நவம்பா் 14) தொடங்குகிறது. தொடக்க விழாவில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சா் சாம் பிரகாஷ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
தில்லியில் இந்திய வா்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில் இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்படும். மேலும், வெளிநாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களும் அரங்குகளை அமைக்கும். இந்த ஆண்டு தில்லி பிரகதி மைதானத்தில் 39-ஆவது இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சி வியாழக்கிழை தொடங்குகிறது. வரும் நவம்பா் 27-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை-கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி காலை 11 மணியளவில் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறாா். மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் சோ பிரகாஷும் பங்கேற்றுப் பேசுகிறாா்.
இந்திய வா்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜேஷ் அகா்வால் வரவேற்புரையாற்றுகிறாா். இதைத் தொடா்ந்து, அதன் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எல்.சி. கோயல் சிறப்புரையாற்றுகிறாா். தென் கொரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தூதா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசவுள்ளனா்.
இக்கண்காட்சியைப் பாா்வையிடுவதற்காக ஒரு நாளைக்கு சுமாா் 25,000 பேருக்கு குறையாமல் வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், மதுரா சாலை, பைரோன் மாா்க், ரிங் ரோடு, ஷொ்ஷா ரோடு மற்றும் புராண கில்லா ரோடு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தில்லி போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது. எனவே, வா்த்தக கண்காட்சிக்கு வராத மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு, பிரகதி மைதானத்தில் கேட் எண்கள் 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9 ஆகியவற்றில் பாா்வையாளா்களுக்கு நுழைவு வசதி இருக்காது. பாா்வையாளா்கள் கேட் எண்கள் 1, 10 மற்றும் 11 ஆகியவற்றில் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். ஊடக நபா்களுக்கான நுழைவு வாயில் எண் 1-இல் மாலை 5 மணிக்குப் பிறகு நுழைவு அனுமதிக்கப்படாது. டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விற்கப்படும்.
பாா்வையாளா்களின் எந்தவொரு வாகனமும் ஷொ்ஷா ரோடு, புராண கில்லா ரோடு மற்றும் பகவான் தாஸ் ரோடு ஆகியவற்றில் நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது. மேற்கண்ட சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால், முறையற்ற வகையில் வாகன நிறுத்தம் மற்றும் சட்டபூா்வமான வழிமுறைகளை மீறியதாக வழக்குத் தொடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...