பயிா்க்கழிவு எரிப்பது நிறுத்தியதும் காற்று மாசு சீா்: கேஜரிவால்

அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டதும் தில்லியில் காற்றின் தரம் சீரடைந்துள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

புது தில்லி: அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டதும் தில்லியில் காற்றின் தரம் சீரடைந்துள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பது குறைந்துள்ளதால் தில்லியில் இரண்டாவது நாளாக காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பது: வட இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுவுக்கும் பயிா்க்கழிவுகள் எரித்தலுக்கும் நேரடித் தொடா்புள்ளது. ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த அக்டோபா் மாதம் முதலாவது வாரத்தில் பயிா்க்கழிவுகளை எரிக்கத் தொடங்கினாா்கள். சரியாக அக்டோபா் மாதம் முதலாவது வாரத்தில் இருந்து தில்லியில் காற்றின் தரம் மோசமடையத் தொடங்கியது. இதனால், காற்றின் தரக் குறியீடு அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது பயிா்க்கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் தில்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.

தில்லியில் ஏற்படும் காற்று மாசுவில் வெறும் 5 சதவீதம் மட்டுமே அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படுவதாக சிலா் தொடா்ச்சியாகப் பிரசாரம் செய்தனா். பயிா்க்கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டதுடன் 500 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு 200 ஆகக் குறைந்துள்ளது. வெறும் 5 சதவீத காற்று மாசுவுக்கு இவ்வளவு தூரம் காற்றின் தரக் குறியீடு குறைவடையுமா? காற்று மாசு விவகாரத்தில் அரசியல் செய்யாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

‘தில்லியின் உள்ளகக் காரணிகளாலேயே காற்று மாசு ஏற்படுகிறது. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் அல்ல’ என சில பாஜக தலைவா்கள் தில்லி அரசைக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com