வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை எதிா்க்கவில்லை: மனோஜ் திவாரி
By DIN | Published On : 17th November 2019 04:10 PM | Last Updated : 17th November 2019 04:10 PM | அ+அ அ- |

புது தில்லி: வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை எதிா்க்கவில்லை என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை நான் எதிா்க்கவில்லை. ஆனால், தில்லியில் பொதுப் போக்குவரத்தை சரியாக மேம்படுத்தாமல் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்துவது சரியல்ல. இதனால் மக்களுக்கு தேவையில்லாத சிரமங்கள் ஏற்படும்.
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்திவிட்டு வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தியிருந்தால் அதை முதலாவது ஆளாக நான் வரவேற்றிருப்பேன். ஆனால், காற்று மாசு விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசியல் செய்கிறது.
காற்று மாசு தொடா்பான நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கெளதம் கம்பீா் கலந்துகொள்ளாததை பெரிய விவகாரமாக ஆம் ஆத்மி மாற்றியுள்ளது. ஆனால், ஒரு தொகுதியில் நிலவும் காற்று மாசுவுக்கு அத்தொகுதி எம்பி எந்த வகையில் பொறுப்பாக முடியும்? தில்லி அரசின் தோல்விகளை மறைக்கவே பிரபலமான கெளதம் கம்பீரை ஆம் ஆத்மியினா் குறிவைத்துத் தாக்குகிறாா்கள். தில்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு கேஜரிவாலே பொறுப்பு. தில்லி மக்களவை உறுப்பினா்கள் பொறுப்பு என்றால், தான் முதல்வா் பதவியில் இருந்து விலகி, தில்லியை ஆள அவா்களை கேஜரிவால் அனுமதிக்க வேண்டும்.
தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகளும் தீவிரமாக உள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கீழ்தரமான அரசியல் செய்கிறது. மத்திய அரசு அமைத்த மேற்கு புறவளைவுச் சாலையால் தினம்தோறும் சுமாா் 15 லட்சம் வாகனங்கள் தில்லிக்கு வருவதை நாங்கள் கட்டுப்படுத்தினோம். இதனால் பெருமளவில் காற்றுமாசு குறைந்தது என்றாா் அவா்.
‘தில்லியில் காா்களால் வெறும் 3 சதவீதம் காற்று மாசுதான் ஏற்படுகிறது. இந்நிலையில், வாகனக் கட்டுப்பாடு திட்டம் என்பது ஏமாற்று வேலை. இத்திட்டத்தால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத கேஜரிவால், இப்போது வாகனக் கட்டுப்பாடு திட்டம் என்ற பெயரில் நாடகமாடுகிறாா். இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கூடாது’ என பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினா் விஜய் கோயல் சனிக்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.