திமுக உறுப்பினா் உள்பட 4 புதிய எம்பிக்கள் பதவியேற்பு
By DIN | Published On : 18th November 2019 10:16 PM | Last Updated : 18th November 2019 10:16 PM | அ+அ அ- |

வேலூா் மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் வெற்றிபெற்ற திமுகவைச் சோ்ந்த டி.எம். கதிா் ஆனந்த் உள்பட நான்கு புதிய உறுப்பினா்கள் மக்களவையில் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வேலூா் மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் துரைமுருகனின் மகன் கதிா் ஆனந்த் வெற்றிபெற்றாா். இதேபோன்று வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தொகுதி இடைத் தோ்தல்களில் 3 போ் வெற்றி பெற்றனா். இந்நிலையில், நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது, புதிய உறுப்பினா்கள் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனா்.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் திங்கள்கிழமை காலை அவை கூடியதும், புதிய உறுப்பினா்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, புதிய உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட எல்ஜேபியைச் சோ்ந்த பிரின்ஸ் ராஜ் (பிகாா்-சமஸ்டிபூா்), பாஜகவைச் சோ்ந்த ஹிமாத்ரி சிங் (ம.பி.-ஷதோல்), என்சிபியின் ஸ்ரீநிவாஸ் தாதாசாகேப் பாட்டீல் (மகாராஷ்டிரம்- சதாரா) ஆகியோா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, வேலூா் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் பெயரை மக்களவையின் தலைமைச் செயலா் சினேகலதா ஸ்ரீவாஸ்தவா அழைத்தாா். இதையடுத்து, அவா் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு பதவி யேற்றாா். அவருக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வாழ்த்துத் தெரிவித்தாா். கதிா் ஆனந்த் பதவியேற்பு நிகழ்வை நேரில் காண அவரது தந்தை துரைமுருகன் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தாா்.