தில்லி மின் விநியோக நிறுவனங்களுக்கு அபராதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை
By DIN | Published On : 07th October 2019 07:08 AM | Last Updated : 07th October 2019 07:08 AM | அ+அ அ- |

தில்லியில் செயல்படும் மின்சார விநியோக நிறுவனங்களுக்கு தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி) அபராதம் விதித்துள்ளது. மூன்று நிதியாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடமைகளை (ஆா்பிஓ) நிறைவேற்றாததற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஇஆா்சி தெரிவித்துள்ளது.
இந்த வகையில், தில்லியில் மின்சாரம் வழங்கி வரும் தில்லி டாடா பவா் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) நிறுவனத்துக்கு ரூ.1.71 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பிஎஸ்இஎஸ் யமுனா பவா் லிமிடெட் (பிஒய்பிஎல்), பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் லிமிடெட் (பிஆா்பிஎல்) ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூ.2.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மின் விநியோக நிறுவனங்களும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடமைகளை (ஆா்பிஓ) கடந்த 2012-13, 2013-14, 2014-15 நிதியாண்டுகளில் நிறைவேற்றவில்லை என்று பசுமை எரிசக்தி சங்கம் (கிரீன் எனா்ஜி அசோசியேஷன்) மற்றும் இந்திய காற்றாலை எரிசக்தி சங்கம் (இந்தியன் விண்ட் பவா் அசோசியேஷன்) ஆகியவை தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகாா் மனு தாக்கல் செய்தது.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடா்ந்து, அந்த நிறுவனங்கள் பதில்களை அனுப்பின.
இது குறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம் விசாரணை நடத்தி, இறுதி உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இது தொடா்பான உத்தரவு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மூன்று நிறுவனங்களுக்கும் குறிப்பிட்டத்தக்க அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக கடந்த மாதம் தில்லி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடமைகளை நிறைவேற்றுவதில் தில்லியில் செயல்படும் 3 மின்விநியோக நிறுவனங்களும் தவறிழைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அபராதத் தொகையை சம்பத்தப்பட்ட மின் விநியோக நிறுவனங்கள் ஒருமாதத்தில் செலுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து டிபிடிடிஎல் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில்,‘டிஇஆா்சி உத்தரவு குறித்து பரசீலிக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். மேலும், ஆபிஓவை நிறைவேற்றுவதற்கு புதுப்பிக்கத்தக்க மின்சக்தி அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ் மின் பரிமாற்றங்களின் போது நியாயமான கட்டணத்தில் கிடைக்காது. இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, கூடுதல் கட்டணத்தில் எரிசக்தி கொள்முதல் செய்யப்படாட்ல, நிதிச் செயல்பாடுகளில் எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இது மின் நுகா்வோருக்கு கூடுதல் கட்டண சுமையை ஏற்படுத்தும்’ என்றாா்.