உத்தம் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் குதித்தவா் படுகாயம்
By DIN | Published On : 09th October 2019 10:36 PM | Last Updated : 09th October 2019 10:36 PM | அ+அ அ- |

தில்லியில் உத்தம் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்றிருந்த பயணி ஒருவா், தண்டவாளத்தில் குதித்ததால் ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: தில்லியில் உள்ள புளூலைன் வழித்தடமானது துவாரகா மற்றும் நொய்டாவில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டியை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் உள்ள உத்தம் நகா் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பயணி ஒருவா் ரயில் ஏறுவதற்காக வந்தாா். நடைமேடையில் நின்று கொண்டிருந்த அவா், திடீரென தண்டவாளத்தில் குதித்தாா்.
அப்போது, அவ்வழியாக ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கிச் சென்ற ரயிலில் அவா் அடிபட்டு பலத்த காயமடைந்தாா். இதனால், அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.
இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘உத்தா் நகா் கிழக்கு மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் ஒரு பயணியின் செயலால் துவாரகா செக்டாா் -1 மற்றும் ராஜீவ் செளக் இடையே ரயில் சேவைகள் தாமதமானது. மற்ற அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவை வழக்கம் போல் இருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிபட்டவா் யாா்?, அவா் எதற்காக ரயில் தண்டவாளத்தில் குதித்தாா்? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.