150 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது
By DIN | Published On : 01st September 2019 12:23 AM | Last Updated : 01st September 2019 12:23 AM | அ+அ அ- |

கிரேட்டர் நொய்டாவில் வாகனத்தில் 150 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றதாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரேட்டர் நொய்டா சைட் 5 பகுதி காவல் நிலைய எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த கஞ்சா பிடிபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிரேட்டர் நொய்டா காவல் கண்காணிப்பாளர் ரன்விஜய் சிங் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த கஞ்சா சாக்கு பைகளில் அடைக்கப்பட்டு மோட்டார் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், போலீஸார் வழக்கமான சோதனையின்போது வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வாகனத்தில் 3 பேர் இருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் வாகனத்தில் இருந்த இருவர் குதித்து தப்பியோடிவிட்டனர். எனினும், காரின் ஓட்டுநர் சுனில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், சட்டவிரோதமாக விற்பதற்காக கஞ்சா எடுத்துச் செல்லப்படுவதாகத் தெரிய வந்தது. அவரும் அவரது கூட்டாளிகள் சந்தீப், குல்லன் சிங் ஆகியோரும் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கஞ்சாவை ஆந்திர மாநிலத்திலிருந்து வாங்கி வந்து தேசியத் தலைநகர்ப் பகுதியில் விற்றதாக வாகன ஓட்டுநர் சுனில் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, தப்பியோடிய சந்தீப், குல்லன் சிங் ஆகியோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ரன்விஜய் சிங் தெரிவித்தார்.