மோடி அரசின் 100-ஆவது நாள்: தேசப் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம்: அமித் ஷா பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தேசப் பாதுகாப்புக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தேசப் பாதுகாப்புக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று, ஞாயிற்றுக்கிழமையுடன் 100-ஆவது நாள் நிறைவடைந்தது. இதையொட்டி, அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: மோடி தலைமையிலான அரசு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது. கடந்த 100 நாள்களில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவை ரத்து செய்தது, முத்தலாக் தடைச் சட்டத்தை இயற்றி முத்தலாக் கொடுமையில் இருந்து முஸ்லிம் பெண்களை விடுவித்தது, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தை திருத்தியது என சில உறுதியான முடிவுகளை மோடி அரசு எடுத்துள்ளது. இதற்காக, பிரதமர் மோடிக்கும், அமைச்சரவை சகாக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தேசப் பாதுகாப்புக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கான முயற்சிகள் வீண் போகாது என்று அந்தப் பதிவில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விரும்பும் முடிவுகள் -ஜாவடேகர்:  மத்திய தகவல் மற்றும் செய்தித் தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இதற்கு முன்னர் கட்சியில் இருந்த எந்தவொரு அரசும் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாள்களில் மக்களுக்கு உகந்த முடிவுகளை எடுத்ததில்லை' என்றார்.
சிறார் பாதுகாப்புக்கு உறுதி -ஸ்மிருதி இரானி: பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், சிறார்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். 
இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
சிறார்கள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோரிடம் காணப்படும் ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்காகவும், பெண்களின் நலத்தை உறுதி செய்வதற்காகவும் தேசிய ஊட்டச் சத்து திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, தேசிய ஊட்டச் சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், சிறார்களுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. முத்தலாக் விவாகரத்து முறையில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. 
8 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாயில் பெண்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கப்பட்டுள்ளது. 
இதுபோன்ற பல திட்டங்களால் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும், சிறார்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும் அரசு உறுதிபூண்டுள்ளது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com