அமெரிக்கா செல்ல 81 வயதானவரைப் போல் வேஷமிட்டவர் கைது: விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பிடிபட்டார்
By DIN | Published On : 11th September 2019 06:23 AM | Last Updated : 11th September 2019 06:23 AM | அ+அ அ- |

அமெரிக்காவில் வேலைத் தேடுவதற்காக 81 வயது முதியவரைப் போன்று வேஷமிட்டுக் கொண்டு சென்ற ஆமதாபாத்தைச் சேர்ந்த 32 வயதான ஜெயிஷ் படேலை தில்லி விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கைது செய்தனர்.
இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நியூயார்க் செல்வதற்காக தில்லி விமானநிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமையன்று 81 வயதான ஜெயிஷ் படேல் என்பவர் சக்கர நாற்காலியில் வந்தார். தலைப்பாகையுடனும், வெள்ளை நிற தாடியுடனும், மூக்குக் கண்ணாடியுடனும் அவர் வந்தார். வயதானவர் போல் அவரது உருவம் தோற்றம் அளித்தாலும், அவரது முகத்தில் வயதானவர்களுக்கான ரேகை எதுவும் இல்லாமல் இளமையாக காணப்பட்டார். எனினும், அவர் பாதுகாப்புச் சோதனையையும், குடியேற்ற அதிகாரிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டு சென்றுவிட்டார்.
பின்னர் அவரது வயதுக்கும் அவரது குரலுக்கும் வித்தியாசம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தையடுத்து, விமானத்தில் ஏற தயாராக இருந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அம்ரிக் சிங் (81) என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டை தயாரித்து அமெரிக்காவுக்கு அவர் செல்ல முயன்றதை ஒப்புக் கொண்டார் என்று தெரிவித்தனர்.
பின்னர் அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், தனது உண்ணையான பெயர் ஜெயிஷ் படேல் என்றும் ஆமதாபாத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் வேலைத் தேடி செல்வதற்காக இந்த வேஷத்தைப் போட்டதாகவும், இதற்கான பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை தயார் செய்வதற்கும், முதியவரைப் போல் ஒப்பணை செய்வதற்கும் பரத் என்ற இடைத்தரகர் உதவியதாக அவர் தெரிவித்தார். அமெரிக்கா சென்ற பிறகு இதற்காக ரூ. 30 லட்சத்தை பரத்துக்கு தருவதாக இவர் ஒப்புக் கொண்டுள்ளார். தில்லி ஹோட்டலில் ஜெயிஷ் படேல் தங்கவைக்ப்பட்டு 81 வயது முதியவரைப்போல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளார். இடைத்தரகர் பரத்தையும், அவருக்கு முதியவர் போல் அலங்காரம் செய்தவரையும் தேடி வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.
தில்லி விமான நிலையத்தில் இதுபோன்ற சம்பவத்தை இதுவரை கண்டதில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.