சிறுமியின் முதுகில் இருந்த தையல் ஊசியை அகற்றிய தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்!
By DIN | Published On : 11th September 2019 06:23 AM | Last Updated : 11th September 2019 06:23 AM | அ+அ அ- |

பத்து வயது சிறுமியின் முதுகில் குத்தியிருந்த இரண்டு அங்குல நீளமுள்ள தையல் ஊசியை அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
வீட்டில் இருந்தப் படுக்கையில் சிறுமியின் தாய் விட்டுச் சென்ற இந்த ஊசி, சிறுமியின் முதுகில் சொருகிவிட்டது. இந்நிலையில், ஏதோ ஒரு பொருள் தனது முதுகில் குத்தப்பட்டு வேதனையுடன் இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்த போதிலும், அதன் உண்மையான காரணத்தை பெற்றோரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள சாச்சா நேரு குழந்தைகள் சிகிச்சை மருந்தகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமிக்கு முதுகில் எக்ஸ்ரே பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் சிறுமியின் முதுகில் ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பெற்றோர்கள் அதை தையல் ஊசி என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இருப்பினும் வலி குறையவில்லை. இதையடுத்து அந்தக் குழந்தை எய்ம்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் மீதமிருந்த ஊசிப் பகுதியை எய்ம்ஸ் மருத்துவர்கள் கவனத்துடன் அகற்றினர்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர் ஷில்பா சர்மா கூறியதாவது: குழந்தைக்கு வலி கடுமையாக இருந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்துக் காய சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு எக்ஸ் ரே கருவி மூலம் பரிசோதித்த போது முதுகு தசையில் ஊசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சையின் போது பக்கத்தில் இருக்கும் தசைகளுக்கு ஊசி செல்லாமல் இருக்கும் வகையில், சில நாள்கள் கண்காணித்து அறுவைச் சிகிச்சை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு பிறகு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஊசி அதே இடத்தில் இருக்கும் வகையில் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
ஏனெனில், அந்த ஊசியானது குழந்தையின் முதுகுத் தண்டின் அருகே இருந்தது. ஆனால், அதிருஷ்டவசமாக முதுகுத் தண்டுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. கதிரியக்க பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தொடர்ந்து எக்ஸ் ரே எடுக்காமல் அதற்கு பதிலாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 30-ஆம் தேதி சிறுமியின் முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஊசியின் மீதமுள்ள பாகம் அகற்றப்பட்டது.
தற்போது குழந்தை நலமாக உள்ளது. அக்குழந்தையால் தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடிகிறது. அதேசமயத்தில் இது போன்ற சிறிய ஊசி போன்ற பொருள்களை குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கையாள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். சிகிச்சைக்கு பிறகு எந்தவித பாதிப்பும் இல்லாததால் சிறுமியை மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்துவிட்டதாக நரம்பியல் மயக்க மருந்து நிபுணர் ஞானேந்திர சிங் கூறினார்.