நொய்டா: வயலில் காயங்களுடன் இளைஞர் சடலம் மீட்பு
By DIN | Published On : 11th September 2019 06:27 AM | Last Updated : 11th September 2019 06:27 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் வயல் ஒன்றில் காயங்களுடன் அடையாளம் தெரியாத இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து எக்ஸ்பிரஸ் வே காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி புவனேஷ் குமார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
எக்ஸ்பிரஸ் வே காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட நொய்டாவில் உள்ள வாஜித்பூர் கிராமத்தில் வயல் வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸார் அந்த இடத்துக்குச் சென்றனர். அங்கு 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம் முகம் மற்றும் உடலின் பல பாகங்களில் காயங்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை 8 மணியளவில் சடலம் மீட்கப்பட்டது.
அவரது சடலத்துக்கு அருகே எஸ்யுவி வாகனத்தின் டயர் தடங்கள் பதிவாகியிருந்தன. சடலத்திற்கு அருகே எந்த விதமான ரத்தக் கறையும் காணப்படவில்லை.
எனவே, அவர் வேறு பகுதியில் கொலை செய்யப்பட்டு சடலத்தை வாகனத்தில் கொண்டுவந்து வயல்வெளியில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவரது சடலத்தில் ஆணுறை ஒன்று இருந்தது. அவரது சடலத்தை அடையாளம் காண்பதற்காக உள்ளூர் மக்களிடம் உதவி கோரப்பட்டது.
ஆனால், அவரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
அவரது ஆடையில் தில்லியைச் சேர்ந்த ஒருவரின் ஆதார் அட்டை ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்அந்த அதிகாரி.