பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க எப்போது நடவடிக்கை? பிரியங்கா கேள்வி
By DIN | Published On : 11th September 2019 06:22 AM | Last Updated : 11th September 2019 06:22 AM | அ+அ அ- |

"நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது; பொருளாதாரத்தை சரிவில் இருந்த மீட்பதற்கு மத்திய அரசு எப்போது நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது' என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிகப்பெரிய சரிவாக பார்க்கப்பட்டது. உற்பத்தித் துறையில் சுணக்கம், வேளாண் பொருள்களின் விளைச்சல் சரிவு ஆகியவற்றின் காரணமாக, இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
பொருளாதார சரிவுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியை குறிப்பிட்டு பிரியங்கா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையையும் தாண்டி படுகுழியில் விழுந்து கொண்டிருக்கிறது.
லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையின் மீது கத்தி தொங்கவிடப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி, உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறை சரிவை நோக்கி பயணிப்பதை காட்டுகிறது.
இது விற்பனைச் சந்தையில் மற்றவர்களது நம்பிக்கையை குறைக்கும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் உறங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசு எப்போது கண் விழிக்கும்' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.