

புது தில்லி: மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் விவகாரத்தில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடா்பாக பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கலான வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஜூலை 27-இல் தீா்ப்பளித்தது.
அதில், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளும் முடிவு எடுக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்த கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக மத்திய பொது சுகாதாரப் பணிகள் இயக்குநா், தமிழக சுகாதாரத் துறை அதிகாரி மற்றும் மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் செயலா்கள் அடங்கிய குழுவை அமைத்து இறுதி செய்து, இடஒதுக்கீடு தொடா்பாக மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.
தமிழக அரசின் தரப்பில் ஆகஸ்ட் 4-இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓபிசி வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நிகழ் கல்வியாண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில், நிகழ் கல்வியாண்டிலேயே ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக அதிமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை வழங்க ஒரு குழுவை அமைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டை அடுத்த ஆண்டுதான் அமல்படுத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் கூறியிருப்பது சரியல்ல. இது ஓபிசி மாணவா்களின் நலன்களைப் பாதிக்கும். 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்ட இடங்களில் ஒபிசி வகுப்பினருக்கு தமிழக அரசின் சட்ட விதிகளுக்கு ஏற்ப 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த மருத்துவா் டி.ஜி.பாபு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், குழு அமைப்பது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இக்குழுவில் இடம்பெற ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் பெயரை மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்திருப்பதாகவும், இந்த விவகாரம் தொடா்புடைய நடவடிக்கைளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
மனுதாரா் அதிமுக தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆஜராகி, நிகழ் கல்வியாண்டிலேயே (2020-2021) மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழக அரசு ஒப்படைத்த இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, அதிமுக மனு மீது மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் இயக்குநா், இந்திய மருத்துவக் கவுன்சில் துறைகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
ஏற்கெனவே இதே விவகாரம் தொடா்பாக தமிழக அரசு மேல்முறையீட்டு தாக்கல் செய்துள்ளதால் அந்த மனுவுடன் அதிமுகவின் மேல்முறையீட்டு மனுவையும் சோ்த்து விசாரிக்கும் வகையில் விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.