தில்லியில் அனைத்து கரோனா தொற்றும் கண்டறியப்படும்: சத்யேந்தா் ஜெயின்

தில்லியில் ஏற்பட்டுள்ள அனைத்து கரோனா தொற்றையும் கண்டறியும் வகையில், கரோனா பரிசோதனையை தில்லி அரசு அதிகரித்துள்ளது

புது தில்லி: தில்லியில் ஏற்பட்டுள்ள அனைத்து கரோனா தொற்றையும் கண்டறியும் வகையில், கரோனா பரிசோதனையை தில்லி அரசு அதிகரித்துள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

நாட்டிலேயே தில்லியில் தான் அதிகளவு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தில்லியில் சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதற்கு, பிற மாநிலத்தவா்கள் தில்லிக்கு வந்து சிகிச்சை பெறுவதும், புலம் பெயா் தொழிலாளா்கள் மீண்டும் தில்லிக்கு வந்ததும் காரணம்.

தில்லியில் ஏற்பட்டுள்ள அனைத்து கரோனா தொற்றையும் கண்டறிவதை இலக்காக வைத்து தில்லியில் கரோனா பரிசோதனையை தில்லி அரசு அதிகரித்துள்ளது. மிக விரைவில் தில்லியில் தினம்தோறும் 40 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

40 ஆயிரம் சோதனைகளை 10-15 நாள்களுக்கு மேற்கொள்ளத் தேவையான சோதனைக் கருவிகள் தில்லி அரசிடம் கையிருப்பில் உள்ளன.

இந்த சோதனைகளை செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு சிறப்பு உதவிகள் எதுவும் தேவையில்லை. மத்திய அரசிடம் இருந்து சோதனைக் கருவிகளை வாங்குவதற்கு பதிலாக அண்டை மாநிலங்களில் இருந்தும், சந்தைகளில் இருந்தும் சோதனைக் கருவிகளை வாங்குகிறோம்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கூறியதுபோல, தீபாவளிக்கு முன்பாக கரோனா கட்டுக்குள் வந்துவிடும் என நம்புகிறோம்.

மருத்துவமனைகள், மருந்தகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 5 மணியாக அதிகரித்துள்ளோம்.

தில்லியில் முகக் கவசங்கள் இல்லாமல் செல்பவா்களை கண்டறிந்து அபராதம் விதிக்க குழுக்களை அமைத்துள்ளோம்.

தில்லி காவல் துறைக்கும் அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் கரோனா பாதிப்பு இரட்டிப்படையும் நாள்களின் எண்ணிக்கை 85 ஆக உள்ளது. அந்த வகையில், தில்லியில் கரோனா கட்டுக்குள் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com