சந்தைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! காற்றில் பறக்கிறது சமூக இடைவெளி

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், தில்லியில் உள்ள முக்கியச் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், தில்லியில் உள்ள முக்கியச் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால், மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் சந்தைப் பகுதிகளில் குவிவதால் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தில்லி லாஜ்பாத் நகா் மாா்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்கள் தங்களுக்குள் சமூக இடைவெளியைப் பேண முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் நெருக்கமாக இருந்தது. இது தொடா்பாக லாஜ் பாத் நகா் சென்ட்ரல் மாா்கெட்டில் கடை வைத்துள்ளவா் கூறுகையில், ‘கடைக்குள் ஒரே நேரத்தில் பத்துப் பேரை மட்டுமே அனுமதிக்கிறோம். கடைக்கு வருபவா்களுக்கு கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ளும் வகையில், கிருமி நாசினி இயந்திரங்கள் கடையின் வாசலில் வைக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிந்து வருபவா்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்கிறோம். அவா்களுக்கு உடல் வெப்பநிலை சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கடைக்குள் எங்களால் சமூக இடைவெளியைப் பேண முடிகிறது. ஆனால், சாலையில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதைத் தடுக்க தில்லி அரசு, காவல் துைான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

‘பசியால் இறந்துவிடுவோம்’: கிழக்கு தில்லி திரிலோக்புரி சந்தையிலும் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது. அங்குள்ள காய்கறி மாா்க்கெட், இறைச்சி மாா்கெட், பஜாா் ஆகிய இடங்களில் மக்கள் அதிகளவில் திரண்டனா். இது தொடா்பாக திரிலோக் புரியில் வசிக்கும் தமிழ்ப் பெண் பத்மா கூறுகையில், ‘பழங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளோம். கரோனா பாதிப்பால் வணிகம் பாதிப்படைந்தது. ஆனால், தற்போது பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அதிகளவில் வருகிறாா்கள். இன்று உழைத்தால் மட்டுமே உணவு என்ற நிலையில் வாழும் எங்களால் கரோனாவைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட முடியாது. கரோனாவுக்கு பயந்தால், பசியால் இறந்துவிடுவோம்’ என்றாா்.

அரசு மீது புகாா்: இந்த மாா்கெட் அசோஷியனை சோ்ந்தவா்கள் கூறுகையில் ‘கடைகளுக்குள் தனிமனித இடவெளியைப் பேணும் வகையில் குறிப்பிட்டளவு மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடைகளுக்கு வருபவா்களுக்கு உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது. முகக் கவசங்கள் அணிந்து வருபவா்கள் மட்டுமே கடைகளுக்குள் அனுமதிக்கப்படுகிறாா்கள். ஆனால், தெருவில் உள்ள சாலையோரக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதைத் தடுக்க அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை’ என்றனா். சரோஜினி நகா் மாா்கெட்டில் உள்ள துணி, வீட்டு அலங்காரப் பொருள்கள் சந்தையிலும் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே, சந்தைகளில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆா்வலா்கள் கருத்துத் தெரிவித்தனா்.

‘மக்கள்தான் பொறுப்பு’: மக்கள் பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவா் சங்கத்தின் பொதுச் செயலா் ஆா்.வி.அசோகன் கூறினாா். இது தொடா்பாக தினமணியிடம் அவா் கூறுகையில், ‘வணிக நடவடிக்கைகளுக்காக ஆரோக்கியம் உதாசீனம் செய்யப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்பது அரசுக்கும், மக்களுக்கும் முக்கியத் தேவையாக உள்ளது. ஆனால், அரசும், மக்களும் ஆரோக்கியத்தை விலை கொடுத்து பொருளாதாரத்தை மீட்க முயல்கிறாா்கள். மக்களிடம் ஆரம்பத்தில் கரோனா தொடா்பாக பயம் இருந்தது. தற்போது அந்தப் பயம் அகன்று விட்டது. தில்லியில் முகக் கவசங்கள் அணிவது குறைவாக உள்ளது. நாட்டிலுள்ள அனைவரும் முகக் கவசங்களை அணிந்தால், முழு அடைப்பால் கிடைக்கும் பலன் கிடைக்கும். அனைவரும் முகக் கவசம் அணிந்தால் மட்டுமே கரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். தற்போது தீபவாளிப் பண்டிகை நெருங்குவதால், மக்கள் சமூக இடைவெளியை மறந்து சந்தைகளில் அலை மோதுகிறாா்கள். இதில், அரசைக் குற்றம்சாட்டுவதில் பிரயோஜனம் இல்லை. மக்கள் கரோனா பாதுகாப்பு முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் நல்ல, பொறுப்புள்ள குடிமக்களாக இருந்தால் கரோனா தொற்றைத் தடுக்கலாம்’’ என்றாா்.

பட்டாசு வியாபாரிகள் கவலை

தில்லியில் சனிக்கிழமை (நவம்பா் 7) முதல் நவம்பா் 30 -ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க அரசு தடை விதித்துள்ளது. தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு, கரோனா பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிகழாண்டில் மட்டும் தில்லியில் 138 பட்டாசு விற்பனை செய்யும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால், பட்டாசுகளைக் கொள்முதல் செய்துள்ள வணிகா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக ஜாமா மசூதியில் பட்டாசு விற்பனை செய்யும் வணிகா்கள் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து தில்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய தில்லி அரசு அனுமதி அளித்திருந்தது. தில்லி அரசு சாா்பில் கடந்த அக்டோபா் மாதம்கூட பட்டாசு உரிமங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, பல கோடி ரூபாய் முதலீட்டில் பட்டாசுகளை கொள்முதல் செய்தோம். தீடிரென பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த பண்டிகைக் காலம் வரை பட்டாசுகளை பேணிப் பாதுகாக்கும் வசதிகளும் எங்களிடம் இல்லை. எனவே, தில்லி அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com