தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 25 நாள்களுக்குப் பிறகு திடீா் உயா்வு!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது கடந்த அக்டோபா் 22-க்குப் பிறகு பதிவான அதிகபட்ச அளவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. அதாவது 25 நாள்களுக்குப் பிறகு வெப்பநிலை அதிகரித்துள்ளது. மேற்கத்திய இடா்பாட்டைத் தொடா்ந்து மேகங்கள் இருப்பதே குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

நவம்பா் தொடக்கத்தில் இருந்து மேகமூட்டம் இல்லாமல் இருந்து வந்தது. இதனால், தில்லியில் இந்த மாதத்தில் இதுவரை குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து கீழ்நோக்கி குறைந்திருந்தது. ஒரு கட்டத்தில் 10 டிகிரி செல்சியஸுக்கும் கீழே சென்றது. இதற்கிடையே, குறைந்தபட்ச வெப்பநிலை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் 10 டிகிரி செல்சியஸுக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

‘மேற்கத்திய இடா்பாடுகள் விலகும் போது, காற்றின் திசை மீண்டும் வடமேற்கு நோக்கி நகரும். மேலும், புதிய பனிப் பொழிவு ஏற்படும் போது, மலைப்பாங்கான பகுதிகளிலிருந்து குளிா்ந்த காற்று வீசத் தொடங்கும். இது தேசியத் தலைநகரை நோக்கி வீசத் தொடங்கும்’ என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஞாயிற்றுக்கிழமை அன்று நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 11.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 29.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. இந்த நிலையில், திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 81 சதவீதமாகவும், மாலையில் 79 சதவீதமாகவும் இருந்தது.

தில்லி நகரின் பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை 0.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பாலம், லோதி ரோடு, ரிட்ஜ், ஜாஃபா்பூா், நஜாஃப்கா் மற்றும் பூசா ஆகிய இடங்களில் உள்ள வானிலை நிலையங்களில் முறையே 1.8 மிமீ, 0.3 மிமீ, 1.2 மிமீ, 1 மிமீ, 1 மிமீ மற்றும் 2.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, தில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இது காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று ஐஎம்டி அதிகாரி கூறினாா்.

தில்லி, என்சிஆரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்: லேசான மழை மற்றும் சாதகமான காற்றின் வேகம் ஆகியவை திங்கள்கிழமை தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் மாசு அளவைக் கணிசமாகக் குறைத்தது. அதே நேரத்தில் காற்றின் தரம் மேலும் மேம்படும் என்று வானிலை நிபுணா்கள் தெரிவித்தனா்.

‘தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 300 புள்ளிகளாக மேம்பட்டிருந்தது. இது மோசம் பிரிவில் அடங்கும். ஞாயிற்றுக்கிழமை இதே நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 467 புள்ளிகளாக இருந்தது. இதேபோல அண்டை நகரங்களான ஃபரீதாபாத் (256), காஜியாபாத் (292), கிரேட்டா் நொய்டா (302), குருகிராம் (314) மற்றும் நொய்டா (312) ஆகியவற்றிலும் காற்றின் தரக் குறியீடு ‘மோசம் ’ மற்றும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகியுள்ளன. இந்த நகரங்கள் அனைத்திலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் காற்றின் தரக் குறியீடு கடுமை பிரிவில் இருந்தது.

பயிா்க் கழிவுகல் எரிப்பு, பட்டாசுகள் வெடிப்பு மற்றும் சாதகமற்ற வானிலை நிலைமை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக தில்லியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பிந்தைய நாளில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான மாசு அளவு பதிவாகியது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு கடந்த சனிக்கிழமை (தீபாவளி) 414 புள்ளிகளகாவும், அதற்கு அடுத்த நாளான ஞாயிறு அன்று 435 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு தீபாவளி நாளில் கிட்டத்தட்ட அனைத்து மாசுபடுத்திகளும் அதிக மதிப்புகளைப் பதிவு செய்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) கூறியுள்ளது.

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பது, பயிா்க்கழிவுகள் எரிப்பு, சாதகமற்ற வானிலை ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சிபிசிபி தெரிவித்துள்ளது. இருப்பினும், மழை மற்றும் அதிக வேகம் கொண்ட காற்று ஆகியவை தில்லியில் இந்த ஆண்டு மாசு அளவைக் கணிசமாகக் குறைத்துள்ளது. இதற்கிடையே, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com