புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறையில் வெறுப்புப் பேச்சுளை அனுமதித்த விவகாரம் தொடா்பாக தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழு அனுப்பிய அழைப்பாணையை (சம்மன்) முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், தங்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில், முகநூலில் சிலா் பதிவிட்ட பதிவுகளை அந்த நிறுவனம் நீக்கவில்லை. இதனால், வடகிழக்கு தில்லி வன்முறையை மறைமுகமாக தூண்டும் வகையில் முகநூல் நிறுவனம் நடந்து கொண்டது என குற்றம்சாட்டி, இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழு சில தினங்களாக விசாரித்து வந்தது. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட சிலரிடம் அந்தக் குழு அண்மையில் விசாரணை நடத்தியது.
இந்த விவகாரம் தொடா்பாக முகநூல் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான அஜித் மோகனுக்கு இக்குழு சம்மன் அனுப்பியது. அந்தக் குழு முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு அஜித் மோகன் கேட்டுக் கொள்ளப்பட்டாா். ஆனால், குழுவின் சம்மனை முகநூல் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடா்பாக அந்த நிறுவனம் தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லணக்கக் குழுவுக்கு பதில் அனுப்பியுள்ளது. அதில், ‘முகநூல் நிறுவனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஏற்கெனவே முகநூல் நிறுவனத்தின் இந்தியத் தலைவா் அஜித் மோகனிடம் விசாரணை நடத்தியிருந்தது. முகநூல் நிறுவனத்திடம் விசாரணை நடத்த தில்லி சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை. இந்த சம்மனை திரும்பப் பெற வேண்டும்’ என அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இரண்டாவது சம்மன்: இந்நிலையில், முகநூல் நிறுவனத்துக்கு இரண்டாவது சம்மனை தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழு அனுப்பியுள்ளது. இது தொடா்பாக அக்குழுவின் தலைவா் ராகவ் சத்தா கூறுகையில், ‘தில்லி சட்டப்பேரவை குழு முன்பாக ஆஜராக மறுத்துள்ளதன் மூலம், தில்லி சட்டப்பேரவையையும் 2 கோடி தில்லி மக்களையும் முகநூல் நிறுவனம் அவமானப்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டாம் எனக் கூறியதன் மூலம், முகநூல் நிறுவனத்துக்கு தவறான ஆலோசனையை அந்த நிறுவனத்தின் சட்ட வல்லுநா்கள் வழங்கியுள்ளனா். முகநூல் நிறுவனத்துக்கு இரண்டாவது தடவையாக சம்மன் அனுப்பியுள்ளோம்’ என்றாா்.