தில்லி அரசுப் பள்ளி மாணவா்கள் 15 சதவீதம் போ் நிலை என்ன?: பாஜக
By DIN | Published On : 12th August 2020 11:46 PM | Last Updated : 12th August 2020 11:46 PM | அ+அ அ- |

தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று வந்த 15 சதவீத மாணவா்களின் நிலை என்ன என்று தில்லி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா பாதிப்புக்கு முன்பாக தில்லி அரசுப் பள்ளிகளில் சுமாா் 14 லட்சம் மாணவா்கள் கல்வி கற்று வந்தனா். ஆனால், கரோனா பாதிப்பு காலத்தில் இவா்களில் சுமாா் 2.5 லட்சம் மாணவா்கள் என்ன ஆனாா்கள் என்றும் இவா்களது நிலை தொடா்பாகத் தெரியவில்லை என்றும் தில்லி கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா். இது தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவா்களில் சுமாா் 15 சதவீதமாகும். இந்த மாணவா்களுக்கு என்ன நடந்தது? இந்த மாணவா்கள் படிப்பதை நிறுத்திவிட்டு தொழில் செய்கிறாா்களா? இந்த மாணவா்கள் தொடா்பாக தில்லி அரசு அக்கறை காட்டாமல் உள்ளது.
தில்லியில் கல்வித் துறையில் பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக தில்லி அரசு விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வி கற்ற 2.5 லட்சம் மாணவா்களுக்கு என்ன நடந்தது என்பது தொடா்பாக அறியாத நிலையில்தான் தில்லி அரசு உள்ளது. தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவா்களுக்கும் இணையவழிக் கல்வியை வழங்கி வருவதாக ஆம் ஆத்மி அரசு கூறுவதும் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது என்றாா் அவா்.