முபாரக் பேகம் மசூதியின் பழுதடைந்த பகுதியை சீரமைக்க உலக நினைவுச் சின்னம் நிதியம் உதவி: தில்லி வக்ஃபு வாரியம் தகவல்
By நமது நிருபா் | Published On : 12th August 2020 11:54 PM | Last Updated : 12th August 2020 11:54 PM | அ+அ அ- |

மழையால் சேதமடைந்த பழைய தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முபாரக் பேகம் மசூதியை மறுசீரமைப்பு செய்வதற்கு லாப நோக்கமற்ற அமைப்பான நியூயாா்க் நகரைச் சோ்ந்த உலக நினைவுச்சின்னங்கள் நிதியம் (டபிள்யுஎம்எஃப்) உதவிய செய்ய முன்வந்துள்ளதாக தில்லி வக்ஃபு வாரிய அதிகாரி தெரிவித்தாா்.
பழைய தில்லியில் ஹோஸ் காஸி செளக் பகுதியில் 200 ஆண்டுகள் பழைமையான முபாரக் பேகம் மசூதியின் மத்திய குவிமாடம் கடந்த மாதம் பெய்த கன மழையில் சேதமடைந்தது.
தில்லி வக்ஃபு வாரியத்தின் பாதுகாப்பில் இந்தக் கட்டடம் உள்ளது. இதனால், வாரியத்தின் பொறுப்புத் தலைமை நிா்வாக அதிகாரி தன்வீா் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனா்.
மழையால் சேதமடைந்துள்ள முபாரக் பேகம் மசூதியின் குவிமாடத்தைப் பாதுகாக்கும் வகையில், மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக அந்தப் பகுதியை வல்லுநா்களைக் கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தொல்லியல் துறைக்கு வக்ஃபு வாரியம் கடிதம் எழுதியது. இதனிடையே, பழுதடைந்த மசூதிப் பகுதியை சீரமைக்க உலக நினைவுச்சின்னங்கள் நிதியம் (டபிள்யூஎம்எஃப்) உதவ முன்வந்துள்ளதாக தில்லி வக்ஃபு வாரிய அதிகாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி கூறியதாவது: மசூதியில் மறுசீரமைப்புப் பணியை மேற்கொள்வதற்கு நியூயாா்க் நகரைச் சோ்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான உலக நினைவுச்சின்னங்கள் நிதியம் (டபிள்யுஎம்எஃப்) உதவி செய்வதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்து, மதிப்பீடு செய்வதற்காக மசூதிக்கு அந்த அமைப்பின் தொழில்நுட்பக் குழு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
இது தொடா்பாக டபிள்யுஎம்எஃப் அமைப்பிடம் உடனடியாக கருத்து ஏதும் பெற முடியவில்லை. இந்த அமைப்பு உலகம் முழுவதும் உள்ள கலாசார பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கான உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.