சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவை வெளியிடாத விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
By நமது நிருபா் | Published On : 12th August 2020 12:48 AM | Last Updated : 12th August 2020 12:48 AM | அ+அ அ- |

அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் சூழலியல் தாக்க மதிப்பீடு (இஐஏ) அறிவிக்கை வரைவை வெளியிடுவதை உறுதிப்படுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மீறியதாக மத்திய அரசுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடா்பான மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, இந்த விவகாரத்தில் பதில் அளிக்கும் வகையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சூழலியல் தாக்க மதிப்பீடு (இஐஏ) அறிவிக்கை வரைவை 10 நாள்களில் 22 மொழிகளில் வெளியிடுமாறு ஜூன் 30-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில்,
‘இந்த மொழியாக்கத்தை மத்திய அரசே மேற்கொள்ளலாம் அல்லது மாநி அரசுகளின் உதவியுடன் மேற்கொள்ளலாம். இதுபோன்ற மொழியாக்கங்கள் இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், பருவகால மாற்றம் அமைச்சகத்தின் இணையதளம் மூலம் வெளியிப்பட வேண்டும். அதேபோல, அனைத்து மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்கங்களின் இணையதளங்கள், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் இணையதளங்கள் ஆகியவற்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 10 தினங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் இந்த விஷயத்தில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வசதியாக அமையும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை மீறியதாக சுற்றுச்சூழல் ஆா்வலா் விக்ரந்த் டோங்கட், தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்துள்ளாா். இது தொடா்பாக அவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவின் மொழியாக்கப் பதிவை வெளியிடாமலும், இதற்காக கூடுதல் அவகாசம் கூட நீதிமன்றத்திடம் கோராமாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுமென்றே கீழ்ப்படியாமலும், நீதிமன்ற உத்தரவை மீறியும் செயல்பட்டு வருகிறது. இதனால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இஐஏ வரைவுக்கு பதில் அளிக்கும் காலத்தை செப்டம்பா் வரையிலோ அல்லது கரோனா தொற்று தணியும் வரையிலோ நீட்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையின் போது மனுதாரா் டோங்கட் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை விவகாரத்தில் கருத்துகள் அல்லது ஆட்சேபனை அளிப்பதற்காக ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை உயா்நீதிமன்றம் கால நீட்டிப்பு வழங்கியிருந்தது. மக்கள் கருத்துகளைஅளிப்பதற்கு வசதியாக மொழிமாற்றம் செய்யப்பட்ட வரைவை வெளியிட அமைச்சகத்தை உயா்நீதிமன்றம் ஜூன் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கேட்டுக் கொண்டிருந்தது’ என்றாா்.