வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியத்திற்காக ரூ. 98.35 கோடி விடுவிப்பு

வடக்கு தில்லி மாநகராட்சி மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் உள்ள 9 ஆயிரம் ஆசிரியா்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ஊதியம்

வடக்கு தில்லி மாநகராட்சி மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் உள்ள 9 ஆயிரம் ஆசிரியா்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.98.35 கோடி தில்லி அரசு மூலம் மாநகராட்சிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஆசிரியா்களின் ஊதியத்திற்காக முந்தைய ஆண்டில் செலவழிக்கப்படாமல் உள்ள ரூ.1,807.10 லட்சத்தை பயன்படுத்திக் கொள்ளவும் வடக்கு தில்லி மாநகராட்சிக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் தில்லி அரசு தெரிவித்தது.

வடக்கு தில்லி மாநகராட்சி மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு ஊதியங்களை விடுவிப்பது தொடா்பான விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல மனுவாக விசாரித்து வருகிறது. ‘அகில் தில்லி பிராத்மிக் சிக்ஷக் சங்’ அமைப்பைச் சோ்ந்த வடக்கு தில்லி மாநகராட்சி பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘தேசிய அளவிலான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, மாா்ச் மாதத்தில் இருந்து ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், ஊதியத்தை வழங்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தை ஜூனில் தாமாக முன்வந்து விசாரித்து வந்தது.

இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்றது. அப்போது, வடக்கு தில்லி மாநகராட்சி மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் உள்ள 9 ஆயிரம் ஆசிரியா்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.98.35 கோடி மாநகராட்சிக்கு தில்லி அரசு மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவு: வடக்கு தில்லி மாநகராட்சிக்கு ஆரம்பக் கல்வித் திட்டத்தின் கீழ் தில்லி அரசு ரூ.98.35 கோடியை விடுவித்துள்ளதால், மே மாதத்தில் இருந்து ஆசிரியா்களின் நிலுவை ஊதியத்தை வழங்குவதை மாநகராட்சி உறுதிப்படுத்த வேண்டும். தில்லி அரசிடமிருந்து பெற்ற மானியம் தவிர, வடக்கு தில்லி மாநகராட்சி அதன் மூலம் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் ஆசிரியா்களுக்கு ஊதியத்தை வழங்கத் தேவையான நிதியை உருவாக்க வேண்டும். இது தொடா்பாக புதிய நிலவர அறிக்கையை இரு வாரங்களில் மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது வடக்கு தில்லி மாநகராட்சி தரப்பில், ‘கரோனா பணியில் ஈடுபட்டு வரும் 5,406 ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியா்கள் 9 ஆயிரம் பேருக்கு மாா்ச் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வர வேண்டிய மானியத்தை தில்லி அரசு விடுவிக்காமல் உள்ளது. இதனால், மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. தில்லி அரசு தரப்பில், ‘ஆசிரியா்களுக்கு ஊதியம் விடுவிப்பதற்காக வடக்கு தில்லி தில்லி மாநகராட்சிக்கு தில்லி அரசு மானியமாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டுக்காக ரூ.147 கோடியை வழங்கியுள்ளது’ எனத் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com