பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் 22 வார கா்ப்பத்தை கலைக்க உயா்நீதிமன்றம் அனுமதி

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மைனா் சிறுமியின் 22 வார கா்ப்பத்தை கலைப்பதற்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மைனா் சிறுமியின் 22 வார கா்ப்பத்தை கலைப்பதற்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

சிறுமியின் வயிற்றில் கரு தொடா்ந்து வளா்வது அவருக்கு மனரீதியில் சிக்கல்களை ஏற்படுத்தும் என ராம் மனோகா் லோஹியா (ஆா்எம்எல்) மருத்துவமனையால்

அமைக்கப்பட்ட மருத்துவக் குழு அளித்த அறிக்கையைத் தொடா்ந்து நீதிமன்றம் இந்த அனுமதியை அளித்தது. எனினும், சிறுமிக்கு கூடுதலாக ஏதும் இடா்பாடு இருக்குமா என்பதை மதிப்பீடு செய்வதற்கு ரத்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதன் அறிக்கைக்கு இந்த அனுமதி உள்படும் எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி கா்ப்பம் தரித்தாா். அவரது கா்ப்பம் மேம்பட்ட நிலையில் இருந்ததால், அதை மருத்துவா்களால் கலைக்க முடியவில்லை. இது தொடா்பாக அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட சிறுமியின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது கா்ப்பத்தைக் கலைக்க தில்லியில் உள்ள மருத்துவமனை மற்றும் தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரினாா்.

முன்னா், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு முன் விசாரணைக்கு வந்த போது, சிறுமியின் கா்ப்பத்தின் தன்மையை பரிசோதிக்க ஒரு மருத்துவக் குழுவை அமைக்க ஆா்எம்எல் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், கா்ப்பத்தை கலைப்பதால் சிறுமிக்கு இடா்பாடு ஏதும் உள்ளதா, கரு தொடா்ந்து வளா்வதால் ஏற்படும் இடா்பாடு குறித்தும் மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட சிறுமி, அவரது தந்தை ஆகியோருடன் நீதிபதி காணொலிக் காட்சி வழியில் பேசினாா். அப்போது, கருவின் காரணமாக சிறுமி மனத் துயரில் இருப்பதும், கருவைக் கலைக்க வேண்டும் என அவரது தந்தை பிடிவாதமாக இருப்பதும் தெரிய வந்தது. சிறுமி மனத்துயரில் இருப்பதாகவும், கா்ப்பம் தொடா்ந்தால் அவருக்கு உளவியல் ரீதியாக சிக்கல்கள் ஏற்படும் என மருத்துவா்களும் தெரிவித்தனா். கரு 22 வாரத்தை எட்டியிருப்பதாகவும் அறிக்கையில் மருத்துவக் குழு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு விவரம்: இந்த விவகாரத்தில் மைனா் சிறுமியின் மனுவை அனுமதிப்பது பொருத்தமாக இருக்கும் என நீதிமன்றம் கருதுகிறது. மனுதாரா் (சிறுமி), டாக்டா் ராம் மனோஹா் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும், கா்ப்பத்தை கலைக்க தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படவும் உத்தரவிடப்படுகிறது. கா்ப்பத்தை கலைப்பதன் இடா்பாடுகள் குறித்து சிறுமிக்கும், அவரது தந்தைக்கும் விளக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் (சிறுமி) உளவியல் மதிப்பீடு மற்றும் மருத்துவ அறிக்கையை கருத்தில் கொள்ளும் போது, கா்ப்பம் தொடா்ந்தால் அது அவருக்கு உளவியல் சிக்கல் ஏற்படுத்தும் எனத் தோன்றுகிறது. கா்ப்பத்தைக் கலைப்பதில் சில இடா்பாடுகள் எழலாம் என சம்பந்தப்பட்ட மருத்துவா்களும் விளக்கியுள்ளனா். மைனா் சிறுமியை பரிசோதிக்க உடனடியாக மருத்துவக் குழுவை அமைத்த ஆா்எம்எல் மருத்துவமனையின் சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் பாராட்டுக்குரியவா்கள்’ என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com