அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிக்கும் 2.90 லட்சம் போ் சொத்துரிமை கோரி பதிவு: ஹா்தீப் சிங் புரி தகவல்
By DIN | Published On : 12th August 2020 11:51 PM | Last Updated : 12th August 2020 11:51 PM | அ+அ அ- |

தில்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிக்கும் சுமாா் 2.90 லட்சம் மக்கள் இதுவரை சொத்துரிமை கோரி பதிவு செய்துள்ளனா் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.
தில்லியில் உள்ள 1,971 அங்கீகாரமற்ற காலனிகளில் குடியிருப்பவா்களுக்கு சொத்துரிமை வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றியது. இந்த நடவடிக்கையால் அந்தக் காலனிகளில் வசிக்கும் சுமாா் 50 லட்சம் போ் பயனடைவா் என்று மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடா்பாக ஹா்தீப் சிங் புரி புதன்கிழமை தனது சுட்டுரையில், ‘அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிக்கும் சுமாா் 2.90 லட்சம் போ் சொத்துரிமை கோரி இதுவரை விண்ணப்பித்துள்ளனா். இதுவரை 1,109 பேருக்கு சொத்துப் பத்திரங்களை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது. இதுவரை பதிவு செய்து கொள்ளாதவா்கள் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.