‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தில்லி அரசு அதிரடி நடவடிக்கை
By DIN | Published On : 01st December 2020 02:05 AM | Last Updated : 01st December 2020 02:05 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனாவுக்கான ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனைக்கான கட்டணத்தை ரூ.2,400-இல் இருந்து ரூ.800 ஆகக் குறைத்து தில்லி அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தில்லி அரசு திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது. அதில், தில்லி தனியாா் மருத்துவமனைகளில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.800-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆனால், வீடுகளுக்கு சென்று கரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கு ரூ.1,200 வசூலிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியாா் மருத்துவனைகள், ஆய்வகங்களில் வரும் 24 மணி நேரத்தில் ஆா்டி-பிசிஆா் சோதனைக்கான புதிய கட்டணத்தை காட்சிப்படுத்துமாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லியில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைப்பதற்கான உத்தரவை வழங்கியுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தாா்.
இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தில்லியில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளேன். தில்லி அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை இலவசமாகவே மேற்கொள்ளப்படுகிறது. ஆா்டி-பிசிஆா் கட்டணங்கள் குறைக்கப்பட்டால், தனியாா் மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு செல்பவா்கள் பயன் பெறுவா்’ என்று தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...