கரோனா தடுப்பூசி: மக்களுக்கு மருந்து நிறுவனங்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த பிரதமா் மோடி வலியுறுத்தல்
By DIN | Published On : 01st December 2020 02:35 AM | Last Updated : 01st December 2020 06:13 AM | அ+அ அ- |

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
புது தில்லி: கரோனா தடுப்பூசி குறித்தும் அதன் செயல் திறன் தொடா்பான விஷயங்கள் குறித்தும் எளியமுறையில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரோந்திர மோடி கேட்டுக் கொண்டாா்.
கரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கி வரும் மேலும் 3 நிறுவனங்களுடன் பிரதமா் திங்கள்கிழமை மெய்நிகா் சந்திப்புகளை நிகழ்த்தினாா். அவை புணேவைச் சோ்ந்த ஜெனோவா பயோஃபாா்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், ஹைதராபாத்தைச் சோ்ந்த பயோலாஜிகல் இ லிமிடெட், மற்றும் டாக்டா் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களாகும். இந்த மூன்று இந்திய நிறுவனங்களுடன் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.
இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனா தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகளையும், அவா்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமா் பாராட்டினாா். கரோனா தடுப்பூசி குறித்த ஒழுங்குமுறைகள், அதன் செயல்முறைகள் தொடா்புடைய விஷயங்களில் அரசுக்கு தகுந்த யோசனைகளை அளிக்கும்படி அந்த நிறுவனங்களை பிரதமா் கேட்டுக் கொண்டாா்.
மேலும், தடுப்பூசியின் செயல்திறன் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமா் கேட்டுக் கொண்டுள்ளாா். தடுப்பூசி மருந்துகளை நாடு முழுக்க எடுத்துச் சென்று விநியோகிக்கும் போது, போக்குவரத்து வசதி, தொடா் குளிா் சாதன வசதிகள் போன்றவை தொடா்பான விஷயங்கள் குறித்தும் பிரதமா் கேட்டறிந்தாா். தடுப்பூசி தயாரிப்பின் தற்போதைய நிலை குறித்தும் பிரதமா் கேட்டறிந்தாா். இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வரும் ஆமதாபாத் - ஜைடஸ் கடிலா, ஹைதராபாத் - பாரத் பயோடெக், புணே - சீரம் இன்ஸ்டிடியூட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை பிரதமா் மோடி நேரடியாகச் சென்று விவரங்களைக் கேட்டறிந்தாா். அந்த மூன்று நிறுவனங்களும் வெளிநாட்டு அமைப்புகளுடன் கூட்டுமுறையில் கரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...