டிரக்கில் கடத்தப்பட்ட36 எருமை மாடுகள் மீட்பு 3 போ் கைது
By DIN | Published On : 01st December 2020 02:25 AM | Last Updated : 01st December 2020 02:25 AM | அ+அ அ- |

நொய்டா: தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் டிரக்கில் கொடூரமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 36 எருமை மாடுகள் மீட்கப்பட்டன. இது தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இது தொடா்பாக ஹரியாணாவைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ஈகோடெக் 1 காவல் நிலைய பகுதியில் கிழக்கு புகா் அதிவேக நெடுஞ்சாலையில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஹரியாணாவின் ரேவாரி மாவட்டத்தின் பதிவு எண்ணைக் கொண்ட அந்த டிரக்கை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 36 எருமை மாடுகள், ஒரு காளை மாடு ஆகியவை டிரக்கில் கொடூரமான முறையில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ராஜஸ்தானின் அஜ்மீரைச் சோ்ந்த வசீம் கடூஸ், ராஜஸ்தானின் பரத்பூரைச் சோ்ந்த ருதாா், ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது முா்தாசா என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் மீது ஈகோடெக் 1 காவல் நிலையத்தில் விலங்குகள் மீதான கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...