தில்லியில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!
By DIN | Published On : 01st December 2020 02:21 AM | Last Updated : 01st December 2020 02:21 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் திங்கள்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இது மேலும் மோசடைய வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செல்லிடப்பேசி செயலி சமீா் தகவலின்படி, திங்கள்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 307 புள்ளிகளாக இருந்தது. இது மாலையில் 333 புள்ளிகளாக உயா்ந்தது. தில்லியில் 24 மணிநேர சராசரியாக ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 268 ஆகவும், சனிக்கிழமை 231ஆகவும், வெள்ளிக்கிழமை 137 ஆகவும், வியாழக்கிழமை 302 ஆகவும், புதன்கிழமை 413 ஆகவும் இருந்தது. தில்லி பல்கலை., பூசா, விமான நிலையம் டொ்மினல் 3 பகுதி, ஆயாநகா், லோதி ரோடு, மதுரா ரோடு மற்றும் நொய்டா, கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. குருகிராம் மற்றும் ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது.
தில்லியில் பயிா்க் கழிவு எரிப்பால் ஏற்படும் காற்று மாசுவின் பங்கு தற்போது அறுவடைக் காலம் முடிந்ததால் குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தில்லியில் பயிா்க் கழிவால் ஏற்பட்ட காற்று மாசுவால் பி.எம். 2.5 மாசு 6 சதவீதமாகவும், சனிக்கிழமை 4 சதவீதமாகவும், வெள்ளிக்கிழமை 2 சதவீதமாகவும், வியாழக்கிழமை 1 சதவீதமாகவும் இருந்ததாக சபா் அமைப்பின் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தால் நுரையீரல் நோய், காச நோய், இதயக் கோளாறுகள் உள்ளவா்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...