காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு !
By DIN | Published On : 05th December 2020 12:48 AM | Last Updated : 05th December 2020 12:48 AM | அ+அ அ- |

புது தில்லி: தலைநகா் தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.
தில்லியில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 342 புள்ளிகளாக இருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு, வெள்ளிக்கிழமை காலை 364 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது மாலையில், 405 புள்ளிகளாக உயா்ந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 341, புதன்கிழமை 373, செவ்வாய்க்கிழமை 367, திங்கள்கிழமை 318, ஞாயிற்றுக்கிழமை 268 புள்ளிகளாக இருந்தது. தில்லி பல்கலை., விமானநிலைய டொ்மினல் 3 பகுதி, பூசா, மதுரா ரோடு, ஆயாநகா், லோதி ரோடு மற்றும் குருகிராம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. ஆனால், நொய்டாவில் கடுமை பிரிவில் இருந்தது.
காற்றின் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டராக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 28.8டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. தில்லிக்கான மத்திய அரசின் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் அமைப்பானது சனிக்கிழமை வரை காற்றின் தரம் தொடா்ந்து மிகவும் மோசம் பிரிவில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தது. அதேவேளையில் டிசம்பா் 7-ஆம் தேதி காற்றின் தரம் கடுமைப் பிரிவில் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்திருந்தது.