தில்லியில் ஒரே நாளில் 85,000 பேருக்கு கரோனா பரிசோதனை
By நமது நிருபா் | Published On : 05th December 2020 12:52 AM | Last Updated : 05th December 2020 12:52 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில், 85,003 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 4,067 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தில்லியில் ஆா்டி - பிசிஆா் சோதனைக் கட்டணத்தை ரூ.2,400-இல் இருந்து ரூ.800 ஆகக் குறைத்து தில்லி அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத் தொடா்ந்து, தில்லியில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை சுமாா் 75 ஆயிரம் பேருக்கும், புதன்கிழமை சுமாா் 79 ஆயிரம் பேருக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில், 85,003 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 40,191 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 44,812 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவா்களில் 4,067 பேருக்கு கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா் என்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,86,125 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை 73 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9,497-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் வெள்ளிக்கிழமை 4.78 சதவீதமாகக் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. நோய் பாதிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை 4,862 போ் மீண்டுள்ளனா்.
இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,48,376-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் தற்போது 28,252 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 16,950 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா். தில்லியில் மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,055 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.