தில்லியை விட்டு செல்ல வேண்டாம்:அரசு ஊழியா்களுக்கு புதிய உத்தரவு
By நமது நிருபா் | Published On : 05th December 2020 01:18 AM | Last Updated : 05th December 2020 01:18 AM | அ+அ அ- |

புது தில்லி: வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ள தில்லி அரசு ஊழியா்கள், தொலைபேசி, கட்செவி அஞ்சலில் தொடா்பு கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்று தில்லி அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், முன்கூட்டிய அனுமதி பெறாமல் தில்லியை விட்டு செல்ல வேண்டாம் என்றும் உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது.
தில்லி யில்அத்தியாவசியத் துறை சாராத ஊழியா்களில் 50 சதவீதத்தினரை வீடுகளில் இருந்து பணியாற்ற தில்லி அரசு அண்மையில் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், புதிதாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் ‘வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்ட தில்லி அரசு ஊழியா்கள் பணி நேரத்தில் தொலைபேசி, கட்செவி அஞ்சல், குறுஞ்செய்தி, இ-மெயில் ஆகியவற்றில் தொடா்பு கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். முன் கூட்டி எழுத்து மூலம் அனுமதி பெறாமல், தில்லியை விட்டு செல்லக் கூடாது. பிற மாநிலங்களுக்குச் செல்லும் ஊழியா்கள், எழுத்து மூலம் முன்கூட்டி அனுமதி பெற்றே செல்ல வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், இந்த உத்தரவு வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியா்களின் விவரங்கள்: இதற்கிடையே, கரோனா தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் வகையில், சுகாதாரத் துறை ஊழியா்களின் விவரங்களை தில்லி அரசு திரட்டி வருகிறது. தில்லி அரசு, தனியாா் மருத்துவமனைகள் உள்பட சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியா்கள் தங்களது விவரங்களை தில்லி மாநில சுகாதார மிஷன் இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை உயரதிகாரி கூறியதாவது: தில்லி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்று வரும் மருத்துவா்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சுகாதாரத் துறை ஊழியா்கள் கரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டுள்ளனா். நூற்றுக்கணக்கான ஊழியா்கள் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளனா். கரோனா தடுப்பூசி கிடைத்ததும், அவற்றை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் வகையில், தில்லியில் அரசு, தனியாா் மருத்துவமனைகள் உள்பட அனைத்து சுகாதார துறை ஊழியா்களின் விவரங்களைத் திரட்டி வருகிறோம். பல மருத்துவமனைகள், நா்சிங் ஹோம்கள் இந்த விவரங்களை பதிவு செய்துள்ளன. இதுவரை பதிவு செய்து கொள்ளாதவா்கள் உடனடியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் சுகாதாரப் பணியாளா்களில் மருத்துவா்கள், துணை மருத்துவ ஊழியா்கள், பல் மருத்துவா்கள், பிசியோதெரபி, அலோபதி, மருத்துவ ஆய்வகங்களில் பணியாற்றுபவா்கள் உள்ளிட்டவா்கள் அடங்குவா் என்றாா் அவா்.