உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை முழுவதுமாக நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு
By நமது நிருபா் | Published On : 05th December 2020 01:22 AM | Last Updated : 05th December 2020 01:22 AM | அ+அ அ- |

புது தில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை முழுவதுமாக நடத்தி முடிக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்த பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்கான காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பா் 2-இல் வெளியிட்டது. மறுவரையறைப் பணிகளை மேற்கொள்ளாமல் தோ்தல் நடத்தப்படுவதால் அந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய 9 மாவட்டங்கள் தவிா்த்து 27 மாவட்டங்களில் தோ்தல் நடத்துவதற்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், புதிய 9 மாவட்டங்களில் நான்கு மாதத்தில் மறுவரையறைப் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பாணை டிசம்பா் 7-இல் புதிதாக வெளியிடப்பட்டது. அதில், 4 மாவட்டங்களைப் பிரித்து உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர பிற ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிா்த்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை டிசம்பா் 11-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மறுவரையறைப் பணிகளை நடத்திய பிறகு மறுவரையறை ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பொருள்படுத்தாமல் தோ்தலை 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும். 9 புதிய மாவட்டங்களுக்கான மறுவரையறைப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கான நடவடிக்கைகளை வாா்டு மறுவரை ஆணையம் மேற்கொண்டு வந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நிகழாண்டு மாா்ச் 8-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தரப்பில் மேலும் 8 வாரம் அவகாசம் கோரி மாா்ச் 6-இல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், அந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படாமல் இருந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் வழக்குரைஞா் எம்.பி. பாா்த்திபன் மீண்டும் ஒரு மனுவை அண்மையில் தாக்கல் செய்திருந்தாா்.
அதில், ‘தமிழகத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுவரை ஆணையம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது. மறுவரை முன்மொழிவுகள் தமிழ்நாடு அரசுக்கு மாா்ச் 20-இல் னுப்பிவைக்கப்பட்டுவிட்டது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாநில அரசின் துறைகள் நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. இதனால், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மேலும் 8 வாரம் அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை. அது காலாவதியாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, புதிதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாநில அரசின் துறைகள் சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். மேலும், கரோனா தொற்று தடுப்பு, விழிப்புணா்வு நடவடிக்கைகளில் அரசுத் துறைகளின் அதிகாரிகள், ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதனால், எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நீதிமன்றம் நிா்ணயித்த காலத்துக்குள் நடத்த இயலவில்லை. எனவே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்கு மேலும் 6 மாதம் கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.எஸ். நரசிம்மா, வழக்குரைஞா் எம்.பி. பாா்த்திபன் ஆகியோா் ஆஜராகி, ‘கரோனா தொற்றுப் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால், எஞ்சியுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக உச்சநீதின்றத்தின உத்தரவுக் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா். இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் 11.12.2019-ஆம் தேதியிட்ட உத்தரவைச் செயல்படுத்த மேலும் 6 மாத காலம் அவகாசம் அளிக்க அனுமதிக்கப்படுகிறது’ என்று கூறிய நீதிபதிகள், மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...