சலூன்கள் இயக்கப்படும் போது அழகு நிலையங்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? தில்லி அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
By நமது நிருபா் | Published On : 05th December 2020 01:17 AM | Last Updated : 05th December 2020 01:17 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லியில் சலூன்கள் இயங்க அனுமதிக்க முடியும் போது, அழகு நிலையங்களையும் (ஸ்பாக்கள்) திறக்க ஏன் அனுமதிக்க முடியாது? என்று தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது. அத்துட ன், தில்லி அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டது.
இது தொடா்பாக தில்லியில் உள்ள அழகுநிலையங்களின் (ஸ்பாக்கள்) உரிமையாளா்கள் சிலா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். வழக்குரைஞா்கள் ராஜேஸ்வா் தாகா் மற்றும் ஹிமான்ஷு தாகா் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், ‘தில்லியில் செயல்படும் அழகுநிலையங்களில் பணியாற்றுவோா் பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில்முறை சிகிச்சையாளா்களாகப் பயிற்சி பெற்றுள்ளனா். சந்தைகள், ஜிம்கள், உணவகங்கள் மற்றும் மதுபானக் கூடங்கள் திறப்பதற்கும், பேருந்து, மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கும் தில்லியில் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், மாா்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தில்லியில்அழகுநிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. அதேவேளையில், பிற மாநிலங்களில் உள்ள அழகுநிலையங்கள் முழுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயங்குவதாக மனுதாரா்கள் கூறியுள்ளனா், ஆனால், தில்லியில் அதுபோன்ற அனுமதி இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் தரப்பில், ‘அழகுநிலையங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.அது சாத்தியமில்லை. மேலும், துணைநிலை ஆளுநரும்கூட அழகுநிலையங்களை செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தளா்த்த மறுத்துவிட்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது. ஸ்பா உரிமையாளா்கள் தரப்பில், ‘சலூன்களில் கூட 6 அடி இடைவெளியை பராமரிக்க முடியாது. ஆனால், அவை இயங்குவதற்கு தில்லி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அழகுநிலையங்களைத் திறக்க அனுமதிக்கவில்லை. கரோனா விதிமுறைகளை நாங்கள் பின்பற்றிச் செயல்படத் தயாராக உள்ளோம்’ என வாதிடப்பட்டது.
அப்போது, நீதிபதி, ‘தில்லியில் சலூன்கள் இயங்க அனுமதிக்க முடியும் போது, அழகு நிலையங்களையும் (ஸ்பாக்கள்) திறக்க ஏன் அனுமதிக்க முடியாது?. மனுதாரா்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதத்தில் முகாந்திரம் உள்ளது. ஆகவே, தில்லி அரசு தனது உத்தரவை மறுபரிசீலனை செய்து ஒரு வாரத்தில் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை டிசம்பா் 16-க்கு ஒத்திவைத்தாா்.