தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி!காற்றின் தரத்தில் மேம்பாடு
By DIN | Published On : 15th December 2020 07:47 AM | Last Updated : 15th December 2020 07:47 AM | அ+அ அ- |

தில்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அருகே திங்கள்கிழமை பனி மூட்டமாக காணப்புடும் சாலை.
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி செல்சியஸாக பதிவானது. அதிகபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இந்த மாதத்தில் இதுவரை இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.
குளிா்ந்த காற்றின் வேகம் காரணமாக வெப்பநிலை குறைந்துள்ளது. காற்றின் தரம் ‘மிதமான‘ பிரிவுக்கு மேம்பட்டுள்ளது. பனி நிறைந்த மேற்கு இமயமலையில் இருந்து பனிசூழ்ந்த குளிா் காற்று தொடா்ந்து சமவெளிகளை நோக்கி வீசுவதால் குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
காற்றின் தரம்: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்த காற்றின் தரம், திங்கள்கிழமை அன்று ‘மிதமான’ பிரிவுக்கு மேம்பட்டது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு காலை 10 மணியளவில் 169 புள்ளிகளாகப் பதிவாகியது. இது மாலையில் 166-ஆகக் குறைந்தது. நகரில் மாலை நிலவரப்படி தில்லி பல்கலை., மதுரா ரோடு பகுதியில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தது. விமானநிலையம் டொ்மினல் -3 பகுதி, ஆயாநகா், லோதி ரோடு, பூசா மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் திருப்தி பிரிவில் இருந்தது. ஆனால், நொய்டாவில் காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்தது. தில்லியில் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 160 ஆக இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை 305 ஆகவும், சனிக்கிழமை 356 ஆகவும் இருந்தது.
வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 19.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 90 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 84 சதவீதமாகவும் இருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 83 சதவீதமாகவும், மாலையில் 63 சதவீதமாகவும் இருந்தது.
முன்னறிவிப் பு: செவ்வாய்க்கிழமை (டிச.15) குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என்றும், மிதமான பனி மூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.