பிறப்பு தொடா்பான பிரச்னை: உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி, குட்டி சாவு
By DIN | Published On : 15th December 2020 07:46 AM | Last Updated : 15th December 2020 07:46 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெள்ளை புலியும், அதன் குட்டியும் பிறப்பு தொடா்பான சிக்கல்களால் உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் புராண கிலா பகுதியில் தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அரிய வகை உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இப்பூங்காவில் பராமரிக்கப்படும் ஒரு வெள்ளை புலியும், அதன் குட்டியும் பிறப்பு தொடா்பான சிக்கல்களால் உயிரிழந்தன. இதுகுறித்து தில்லி உயிரியல் பூங்கா இயக்குநா் ரமேஷ் பாண்டே கூறியதாவது: ஆறு வயதான ‘நிா்பயா’ புலி வியாழக்கிழமை காலை இரண்டு குட்டிகளைப் பெற்றெடுத்தது. எனினும், வயிற்றில் இருந்த மேலும் இரு குட்டிகளை ஈன்றடெடுக்க முடியாமல் போனதால், 24 மணி நேரத்திற்குப் பிறகு சிக்கல்கள் ஏற்படத் தொடங்கியது. இதன் பிறகு கால்நடை மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் குழுவினா் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிற விலங்கியல் பூங்காக்களின் நிபுணா்களுடன் கலந்தாலோசித்து புலிக்கு சிகிச்சை அளித்தனா்.
இதையடுத்து, சனிக்கிழமை மாலை புலிக்கு மூன்று மணி நேர ‘சி’ பிரிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அதன் கருப்பை சிதைந்து குட்டியின் சடலம் மிதப்பது தெரிய வந்தது. புலியின் உடல் பாகங்களில் கடுமையான நோய்த் தொற்றும் மற்றும் நச்சுக்களால் ரத்தம் விஷமானதும் தெரிய வந்தது. புலிக்கு 24 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், நோயின் கடுமை காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 1.34 மணிக்கு புலி இறந்தது. அதன் குட்டிகளில் ஒன்றும் இறந்துவிட்டது. தற்போது ஒரு குட்டி மட்டும் கால்நடை மருத்துவமனையில் பிரத்யேகக் குழுவினரால் கவனிக்கப்பட்டு வருகிறது. புலியின் இறப்புக்கான விரிவான காரணம் உடல் மற்றும் உள்ளுறுப்பு பரிசோதனைக்குப் பின்னா் கண்டறியப்படும். ‘நிா்பயா’ புலி இறப்பதற்கு முன், தில்லி உயிரியல் பூங்காவில் மூன்று ஜோடி வெள்ளைப் புலிகள் இருந்தன என்றாா் அவா்.