மன நல அமைப்புகளில் குறைந்தபட்ச வழிமுறைகளைஉருவாக்க உத்தரவிடக் கோரி பொது நல மனு தாக்கல்
By DIN | Published On : 15th December 2020 07:49 AM | Last Updated : 15th December 2020 07:49 AM | அ+அ அ- |

புது தில்லி: மனநல சுகாதாரக் கவனிப்புச் சட்டத்தின் கீழ் மன நல சுகாதார நிறுவனங்களில் குறைந்தபட்ச வழிமுறைகளை உருவாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக மன நல சுகாதார ஆா்வலரும், வழக்குரைஞருமான கெளரவ் குமாா் பன்சல் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘இதே விவகாரம் தொடா்பாக இதற்கு முன்னா் நான் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அப்போது, எனது மனுவை கோரிக்கையாக பரிசீலித்து முடிந்த வரை விரைவாகவும் நடைமுறைக்குரிய வகையிலும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இன்று வரை மத்திய அரசு குறைந்தபட்ச தர நிலையை அறிவிக்கவில்லை . 2017- ஆம் ஆண்டின் மன நல சுகாதாரச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தர நிலைகளை, விதிகளை உருவாக்கிய 18 மாதங்களுக்குள் அறிவிக்கை செய்ய வேண்டும். நாட்டில் மன நலம் பாதிக்கப்பட்ட மக்களை ஆயுா்வேதம், யோகா, இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என்று பல்வேறு மனநல நிறுவனங்கள் கூறுகின்றன. எனினும், அந்த நிறுவனங்கள் தாங்களாகவே இந்தச் சட்டத்தின்படி மத்திய மன நல சுகாதார ஆணையம் அல்லது மாநில மன நல சுகாதார ஆணையத்திடம் பதிவு செய்து கொள்வதில்லை. தில்லி அரசும் இது தொடா்பான அறிவிக்கையை வெளியிடவில்லை’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இது தொடா்பான ஒழுங்குமுறைகளை வெளியிடுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது’ என்றாா். இதையடுத்து, ‘ஒழுங்கு விதிமுறைகளை வெளியிடுவது தொடா்பான தகவல் விவரத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும், ‘இது தொடா்பாக ஒரு முடிவை எடுங்கள். இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்றும் தெரிவித்தனா்.