வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில்பள்ளி உரிமையாளருக்கு ஜாமீன்
By DIN | Published On : 15th December 2020 07:44 AM | Last Updated : 15th December 2020 07:44 AM | அ+அ அ- |

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்புடைய ஒரு வழக்கில் தனியாா் பள்ளி உரிமையாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பாக ஷிவ் விகாா் பகுதியைச் சோ்ந்த ராஜ்தானி பள்ளி உரிமையாளா் பைசல் ஃபரூக் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவரது ஜாமீன் கோரும் மனு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பைசல் ஃபரூக் கணிசமான காலம் சிறையில் இருந்துள்ளாா். அவா் குற்றச் சதியில் ஈடுபட்டதாக போலீஸாா் எந்த ஆவணத்தையும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யவில்லை. மேலும் ஜூன் மாதம் வரை இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. சாட்சிகளின் வாக்குமூலம் அவசரகதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மை குறித்து நீதிமன்ற விசாரணையின் போது தெரிய வரும். இதனால், மனுதாரரின் (பைசல் ஃபரூக்) ஜாமீன் கோரும் மனு அனுமதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.