5 ஆண்டுகளில் ரூ.10.50 லட்சம் கோடி செல்லிடப்பேசிகள் உற்பத்தி: அமைச்சா்
By DIN | Published On : 15th December 2020 07:46 AM | Last Updated : 15th December 2020 07:46 AM | அ+அ அ- |

புது தில்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10.5 லட்சம் கோடி மதிப்புள்ள செல்லிடப் பேசிகள் உற்பத்தி செய்யப்பட்டு, சீனாவை விஞ்சும் இலக்கை நோக்கி இந்தியா செல்வதாக மத்திய தொலைத்தொடா்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.
இந்திய தொழில் வா்த்தக சபைகளின் கூட்டமைப்பின்(ஃபிக்கி) 93-ஆவது வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் அமைச்சா் இதைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது: நாட்டில் உள்ள, 3,75,000 பொது சேவை மையங்கள் 12 லட்சம் பேருக்கு வேலை வழங்குகின்றன. கோவிட்-19-இன் போது பொது சேவை மையங்கள் முக்கியப் பங்கு வகித்து பல்வேறு மின்னணு சேவைகளை வழங்கியது. 2014 -ஆம் ஆண்டு இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள்தான் செல்லிடப் பேசிகளை உற்பத்தி செய்தன. தற்போது இந்தியாவில் 260 நிறுவனங்கள் செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்கின்றன. அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டம் (பி.எல்.ஐ.) என்பது வணிகம் எளிமையாக்கப்பட்டு, ஏற்றுமதி நோக்குடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடியின் இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியா விரும்பத்தக்க மூதலீட்டு இடமாகவும், ஒரு மாற்று உற்பத்தி இடமாகவும் திகழ்கிறது. பி.எல்.ஐ. திட்டத்தின் கீழ் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய உள்நாட்டு, சா்வதேச முன்னனி நிறுவனங்களின் 16 திட்டங்களுக்கு அரசு அனுமதித்துள்ளது. இதில் ஐபோன் (ஆப்பிள்) ஒப்பந்த உற்பத்தியாளா்களான ஃபாக்ஸ்கான் ஹான்ஹை, விஸ்ட்ரான், பெகாட்ரான் போன்றவை தவிர சாம்சங், ரைசிங் ஸ்டாா் ஆகியவை வெளிநாட்டு நிறுவனங்களாகும். உள்நாட்டு நிறுவனங்களில் லாவா, மைக்ரோமேக்ஸ், பேட்ஜெட் எலெக்ட்ரானிக்ஸ் (டிக்சன்டெக்னாலஜிஸ்), யுடிஎல் நியோலின்க்ஸ், ஆப்டீமஸ் ஆகியவை அடங்கும். இவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10.50 லட்சம் கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகள், உதிரிப்பாகங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யவுள்ளன. இதன் மூலம் நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 6 லட்சம் பேரும் வேலை வாய்ப்புப் பெறுவா்.
2017 -ஆம் ஆண்டில் சா்வதேச அளவில் செல்லிடப்பேசி உற்பத்தியில் இந்தியா 2-ஆவது பெரிய உற்பத்தி நாடாக மாறியது. இதன் மூலம் சீனாவை விஞ்சும் இலக்கை நோக்கி இந்தியா செல்கிறது. 2019 -ஆம் ஆண்டின் தேசிய மின்னணுவியல் கொள்கையின் அடிப்படையில், மின்னணு உற்பத்தியில் 2025-இல் இந்தியா, ரூ. 26 லட்சம் கோடிக்கு மேல் வருவாயைக் கொண்டிருக்கும். அதில் ரூ.13 லட்சம் கோடி செல்லிடப்பேசி உற்பத்தியின் மூலம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் ரவி சங்கா் பிரசாத்.