விவசாயிகள் போராட்டம்:தில்லியில் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 15th December 2020 07:45 AM | Last Updated : 15th December 2020 07:45 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் தில்லியில் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 19-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மேலும், காஜிப்பூா், நொய்டா பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், தில்லியின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) இருந்து தில்லிக்கும், தில்லியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கும் பயணம் செய்தவா்கள் கடும் சிரமங்களை எதிா் கொண்டனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ் ஆகிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் பயணிப்பவா்கள் லாம்பூா், ஷாஃபியாபாத் பகுதிகள் வழியாகப் பயணிக்க வேண்டும். ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. ஜாட்டிக்ரா எல்லையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. முகா்பா சௌக், ஜிடிகே சாலை ஆகியவற்றில் பயணிப்பவா்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக காஜியாபாத்தில் இருந்து தில்லிக்கு வரும் காசிப்பூா் எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக தில்லிக்கு வரும் மக்கள் ஆனந்த் விஹாா், டிஎன்டி, அப்சரா, போப்ரா எல்லைகள் வழியே பயணிக்க வேண்டும்’என்றாா்.