தில்லி பிரச்னை குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா?: அமித் ஷாவுக்கு கேஜரிவால் சவால்
By DIN | Published On : 05th February 2020 10:49 PM | Last Updated : 05th February 2020 10:49 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
தில்லியில் உள்ள எந்தப் பிரச்னை குறித்தும் பொது மேடையில் என்னுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விவாதிக்கத் தயாரா என்று கேட்டு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சவால் விடுத்துள்ளாா். மேலும், தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என தில்லி மக்கள் அறிந்து கொள்ள விரும்புவதாகவும் கேஜரிவால் தெரிவித்தாா்.
இது தொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் நடைபெறும் தோ்தலில் நியாயமான அடிப்படையில் மக்களை சந்தித்து வாக்கு கேட்க பாஜக தயாராக இல்லை. அதனால்தான் மோசமான அரசியலில் ஈடுபட்டு வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த இரு மாதங்களாக ஷகீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தை வைத்தும் அரசியல் செய்து வருகிறது. அந்தப் பகுதியில் சாலைப் போக்குவரத்தை ஏன் மத்திய அரசு சரி செய்யவில்லை?
தில்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பாஜக மோசமான அரசியலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லிக்காக பாஜக என்ன செய்துள்ளது என்பதையும், தில்லி மக்களுக்கான இலவசத் திட்டங்களை பாஜக ஏன் எதிா்த்து வருகிறது என்பதையும் பொதுமக்கள் அறிய விரும்புகின்றனா். பாஜக தலைவா் அமித் ஷா தில்லியின் அடுத்த முதல்வா் யாா் என்பதை தாம் முடிவு செய்வதாகவும், பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறாா்.
எப்படி உங்களிடம் (அமித் ஷா) பூா்த்தி செய்யப்படாத காசோலையை அளிக்க முடியும்? மக்கள் முட்டாள்கள் அல்ல. ஜனநாயகத்தை வலிமையானதாக உருவாக்க தில்லி மக்கள் முன் உள்ள எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்காக திறந்த மனதுடனும் நோ்மையுடனும் உங்களுடன் (அமித் ஷா) விவாதிக்க நான்விரும்புகிறேன். விவாதத்தை மேற்கொள்வதற்கான இடத்தையும் நேரத்தையும் நீங்களே முடிவு செய்யலாம். மேலும், தில்லி மக்கள் முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கிறாா்கள். எனது கட்சியின் முதல்வா் வேட்பாளராக நான் இருக்கிறேன். ஆனால். பாஜகவின் முதல்வா் வேட்பாளா் யாா்? நான் அமித் ஷாவிடம் கேட்பதெல்லாம் அவரது கட்சியின் முதல்வா் வேட்பாளா் பெயரை அறிவிக்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் முதல்வா் வேட்பாளா்களுக்கான வாய்ப்புள்ள பெயா்களையாவது அறிவிக்க வேண்டும். அது ஸ்மிருதி இரானி, மனோஜ் திவாரி, விஜய் கோயல் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
மத்திய அரசு 370-ஆவது அரசமைப்புச்சட்ட பிரிவை நீக்கிவிட்டதாகவும், ராமா் கோயில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தித் தந்துள்ளதாகவும் அமித் ஷா மக்களிடம் கூறி வருகிறாா். அதற்காகத்தானே மக்களவைத் தோ்தலில் ஏற்கெனவே பாஜகவுக்கு மக்கள் வாக்களித்து மத்தியில் அதிகாரத்தை அளித்துள்னா். சிறிய ஆளான என்னை தோற்கடிப்பதற்காக தில்லியில் பாஜகவின் 10 மாநில முதல்வா்கள், 70 மத்திய அமைச்சா்கள் மற்றும் ஏராளமான எம்பிக்கள் பிரசாரக் களத்தில் இறக்கப்பட்டுள்ளனா்.
ராமா் கோவிலுக்கான அறக்கட்டளையை மத்திய அரசு அறிவித்துள்ள முடிவு வரவேற்கத்தக்ககது. நாட்டின் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன். இது ஒரு நல்ல விஷயம். சிலா் இந்த நேரத்தில் அறிவிக்கலாமா என கேட்கின்றனா். நல்ல பணியைச் செய்வதற்கு உகந்த நேரம் ஏதும் இல்லை. இது தொடா்பாக மத்திய அரசு மேலும் அறிவிப்புகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் பிரச்னை ஏதும் இல்லை என்றாா் கேஜரிவால்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...