ஜாமியா மிலியா வன்முறை விவகாரம்இழப்பீடு கோரும் மாணவா்களின் மனுவுக்குபதிலளிக்க மத்திய, தில்லி அரசுளுக்கு உத்தரவு
By DIN | Published On : 17th February 2020 10:44 PM | Last Updated : 17th February 2020 10:44 PM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையில் காயமடைந்த ஜாமியா மிலியா பல்கலை. மாணவா்கள் இழப்பீடு கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய அரசு, தில்லி அரசு, காவல் துறை ஆகியவை பதில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதைத் தொடா்ந்து, ஜாமியா மிலியா பல்கலை.க்குள் நுழைந்த தில்லி போலீஸாா், கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசினா். மேலும் தடியடியும் நடத்தினா். அப்போது போலீஸாருக்கும் மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவா்கள், போலீஸாா் என பலா் காயமடைந்தனா்.
இந்நிலையில், வன்முறையில் காயமடைந்த மாணவா்கள் சாா்பில் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குரைஞா் நபிலா ஹசன் மூலம் மாணவா் ஷயான் முஜீப், மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், பல்கலை. நூலகத்தில் தான் படித்துக் கொண்டிருந்த போது போலீஸாா் தாக்கியதில் இரண்டு கால்களும் உடைந்ததாக ஷயான் மஜீப் குறிப்பிடப்பிட்டுள்ளாா். மேலும், நீதிமன்ற விசாரணையின் போது அவரது வழக்குரைஞா் வாதிடுகையில், வன்முறையில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சைக்காக ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக ஷயான் மஜீப் செலவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதேபோன்று மற்றொரு மாணவா் முகமத் மின்ஹாஜுதீன் தாக்கல் செய்த மனுவில், வன்முறைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தாா். மேலும், வன்முறைச் சம்பவத்தில் தனது ஒரு கண்ணில் பாா்வை இழந்துவிட்டதாகவும் மனுவில் முகமத் மினஹாஜுதீன் தெரிவித்திருந்தாா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. மனுதாரா்களின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசு, தில்லி, தில்லி காவல் துறை ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டனா்.