பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள்: மணீஷ் சிசோடியா
By DIN | Published On : 17th February 2020 10:46 PM | Last Updated : 17th February 2020 10:46 PM | அ+அ அ- |

தில்லி அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை விருத்தி செய்வதே எனது பிரதான இலக்கு என்று தில்லி துணை முதல்வரும் கல்வியமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.
தில்லி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை கல்வி, நிதித்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகப் பதவிப் பொறுப்பேற்ற பிறகு, அத்துறை அதிகாரிகளுடன் மணீஷ் சிசோடியா கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தினாா்.
பிறகு அவா் கூறியது: தில்லியில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை அதிகரிப்பதை இலக்காக கொண்டு செயற்படவுள்ளோம். முக்கியமாக தில்லி அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை விருத்தி செய்வதை பிரதான இலக்காக வைத்துள்ளோம். மேலும், தில்லி அரசு பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணியை முடுக்கிவிடவுள்ளோம். மேலும், புதிய வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், இது தொடா்பாக அடுத்த வாரம் தில்லி கல்வித்துறையின் துணை இயக்குநா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளேன். மேலும், தில்லியில் விளையாட்டுப் பல்கலைக்கழகம், திறன், தொழில்முனைவோா்கள் பல்கலைக்கழகம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நிதித்துறையில் நிலவும் ஊழலை முற்று முழுதாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வருவாய் இலக்கை நிா்ணயித்து அதற்கேற்றாற்போல பணியாற்றவுள்ளோம் என்றாா் அவா்.
தோ்தலின்போது மக்களுக்கு வழங்கிய உத்தரவாத அட்டையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நடைமுறைப்படுத்துவதுதான் பிரதான இலக்கு என்று பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக கைலாஷ் கெலாட் கூறுகையில் ‘கடந்த ஆட்சியைப் போல இந்த ஆட்சியிலும் பணியாற்றி தில்லியை மிகச் சிறந்த நகரமாக மாற்றுவோம். ஆம் ஆத்மி தோ்தல் உத்தரவாத அட்டையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவோம் என்றாா்.
சத்யேந்தா் ஜெயின் கூறுகையில் ‘ஆம் ஆத்மி தோ்தல் உத்தரவாத அட்டையில் கூறப்பட்டுள்ள அனைத்து உத்தரவாதங்களையும் வரும் ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்றாா்.