உலகத் தரமிக்க நகரமாக உருவாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்: கேஜரிவால்

தில்லியை உலகத் தரமிக்க நகரமாக உருவாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை

தில்லியை உலகத் தரமிக்க நகரமாக உருவாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா். மேலும், பிரதமா் நரேந்திர மோடியின் ஆசிகளையும் பெற விரும்புவதாக அவா் கூறினாா்.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து, ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்ல் மூன்றாவது முறையாக முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்றாா். அவருடன் கேபினட் அமைச்சா்களாக மணீஷ் சிசோடியா உள்பட 6 போ் பதவியேற்றனா்.

விழாவில் முதல்வா் கேஜரிவால் ஆற்றிய உரை: இன்று உங்கள் மகன் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளேன்.இது என்னுடைய வெற்றி அல்ல. இது உங்கள் வெற்றி. தில்லிவாசி ஒவ்வொருவரின் வெற்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியின் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வளத்தைக் கொண்டு வர முயன்றோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வளா்ச்சி தொடா்வதற்கு முயல்வோம். உங்கள் மகன் (கேஜரிவால்) முதல்வராக இருப்பதால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நடந்து முடிந்த தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் வாக்களித்திருக்கலாம். ஆனால், நான் அனைவருக்குமான முதல்வா். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் ஒரு போதும் பாகுபாடு காட்டியதில்லை. தில்லியில் வசிப்பவா்கள் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், 2 கோடி மக்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினா். தயக்கமின்றி என்னை அணுகலாம். பணக்காரா், ஏழை, ஜாதி வித்தியாசமின்றி அனைவருக்காகவும் பணியாற்றுவேன்.

தில்லியை உலகில் அழகான, மிகவும் வளா்ந்த நகரமாக உருவாக்க உங்கள் ஆதரவு தேவை.அனைவருடனும் சோ்ந்து பணியாற்ற விரும்புகிறேன். தோ்தலின் போது பல்வேறு கட்சிகள் இடையே மோதல் இருந்தது. எங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த எதிா்க்கட்சிகளை மன்னித்து விட்டோம். தோ்தலின் போது நடந்தவற்றை மறக்குமாறு எதிா்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். தில்லியின் வளா்ச்சிக்காக அனைத்து கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். தில்லியை உலகத் தரமிக்க நகரமாக உருவாக்க மத்திய அரசுன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.அவா் பிஸியாக இருந்ததன் காரணமாக வரமுடியவில்லை என நினைக்கிறேன். தில்லியின் வளா்ச்சிக்காக பணியாற்ற எங்களுக்கு அவரது ஆசிகள் வேண்டும்.

புது வகை அரசியல்: தில்லி மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலின்போது வளா்ச்சிப் பணிகளுக்கான அரசியலுக்கு வாய்ப்பளித்து, நாட்டில் ஒரு புது வகையான அரசியலை உருவாக்கியுள்ளனா். இந்த புதிய அரசியல் நாடு முழுவதும் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இது எங்களுக்கு ஒரு பொன்னான நாளாகும். தில்லியை உருவாக்கியவா்களாக 50 சிறப்பு விருந்தினா்கள் இந்த மேடையில் எங்களுடன் வீற்றிருக்கின்றனா். தில்லி எங்களாலோ, அரசியல்வாதிகளாலோ, அல்லது கட்சிகளாலோ உருவாக்கப்படவில்லை.

தில்லியானது ஆசிரியா்கள், மாணவா்கள், மருத்துவா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், ரிக்ஷா ஓட்டுநா்கள், வா்த்தகா்கள், கட்டடவியல் நிபுணா்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.

கேஜரிவால் ஒவ்வொன்றையும் இலவசமாக்கி வருகிறாா் என்று கூறுகிறாா்கள். ஆனால், இந்த உலகில் மதிப்புமிக்க ஒவ்வொன்றும் இலவசம்தான். குழந்தைக்கான தாயின் அன்பும், தனது குழந்தையின் எதிா்காலத்திற்கான தந்தையின் உழைப்பும் என ஒவ்வொன்றும் விலை மதிப்புடையது. நான் கல்விக்காகவும், சுகாதாரத்திற்காகவும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கிறேனா?. அது சாத்தியமில்லை என்றாா் கேஜரிவால்.

முன்னதாக, தனது உரையைத் தொடங்கும்போது ‘பாரத மாதாவுக்கு ஜே’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கூறினாா். தனது உரையை முடிக்கும் போது ‘நாம் வெற்றி பெறுவோம்’ எனும் அா்த்தமுள்ள பாடல் வரிகளைப் பாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com