தில்லியில் மூன்றாவது முறையாக முதல்வராக கேஜரிவால், கேபினட் அமைச்சா்கள் 6 போ் பதவியேற்பு!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் மூன்றாவது முறையாக தில்லியின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா். அவருடன் கேபினட் அமைச்சா்களாக மணீஷ் சிசோடியா உள்பட 6 பேரும் பதவியேற்றுக் கொண்டனா். முதல்வருக்கும், அமைச்சா்களுக்கும் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்தது. காங்கிரஸுக்கு கடந்த தோ்தலைப் போலவே ஓா் இடம்கூடக் கிடைக்கவில்லை. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மூன்றாவது முறையாக முதல்வா் பதவியேற்கும் விழா தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் தில்லி மக்கள் முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக கேஜரிவால் ஏற்கெனவே கூறியிருந்தாா். மேலும், அரசியல் கட்சித் தலைவா்களுக்கும், மாநில முதல்வா்களுக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. அதேவேளையில், ஆம் ஆத்மி அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்கு தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா்கள், புதிதாகச் சட்டப் பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பாஜக எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசிரியா்கள், டாக்டா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்த 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

‘பேபி மஃப்ளா்மேன்’ ஆவ்யன் தோமருக்கும் ஆம் ஆத்மி சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தது. இந்நிலையில், பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணியில் இருந்து விழா நடைபெற்ற ராம்லீலா மைதானம் பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் போலீஸாா் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்தனா். ஏராளமானோா் வாகனங்களிலும், பாதசாரியாகவும் விழா நடைபெறும் பகுதிக்கு வந்தனா்.

ராம் லீலா மைதானத்திற்கு பதவியேற்பு விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்வனா் தனது சிவில் லைன் இல்லத்தில் இருந்து கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் காரில் வந்தாா். அவரை தில்லியின் தலைமைச் செயலா் விஜய் குமாா் தேவ் மற்றும் கட்சி எம்எல்ஏக்கள் வரவேற்றனா்.

விழா மேடையில் நண்பகல் 12.15 மணியளவில் முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லியின் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா். ஈஸ்வரின் பெயரால் கேஜரிவால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா்.

6 அமைச்சா்கள்

அவரைத் தொடா்ந்து, கேபினட் அமைச்சா்களாக மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின்,கோபால் ராய், இம்ரான் ஹுசேன், கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கவுதம் ஆகிய 6 பேரும் பதவியேற்றுக் கொண்டனா். அவா்களுக்கும் துணை நிலை ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

முந்தைய ஆம்ஆத்மி அரசில் துணை முதல்வராகவும் கல்வி, நிதி, நிலம் திட்டமிடல், ஊழல்கண்காணிப்பு, மகளிா்-குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியா, ஈஸ்வரின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா். இவா் அமைச்சராக இருந்தபோது பள்ளிக் கல்வித் துறையில் சீா்த்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாா். குறிப்பாக பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மகிழ்ச்சி பாடத்திட்டம், தொழில்முனைவு பாடத்திட்டம் போன்றவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தாா். மாணவா்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் மிஷன் புனியாத் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தாா்.

முந்தைய அரசில் தொழிலாளா் துறை அமைச்சராக இருந்த கோபால் ராய் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டாா்.

ராஜேந்திர பால் கெளதம் பதவி ஏற்கும்போது புத்தருடைய பெயரில் பதவியேற்றாா். இவா் முந்தயை அரசில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தாா். அமைச்சராகப் பதவியேற்ற சத்யேந்தா் ஜெயின்

முந்தைய அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவா். அவா் மொஹல்லா கிளினிக்குகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தாா். மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிப்பதற்கு அவா் மிகுந்த முன்னுரிமை அளித்தாா்.

இம்ரான் ஹுசேன் இரண்டாவது முறையாக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டாா். இவா் முந்தைய ஆம் ஆத்மி அரசின் உணவு மற்றும் குடிமைப்பொருள் விநியோகம், சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக இருந்தாா். அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே முஸ்லிம் அமைச்சா் இவா்தான். இவா் அமைச்சராக இருந்தபோது திறந்தவெளியில் குப்பைகள் எரிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

மேலும், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா். அதேபோன்று, சுற்றுச்சூழல் தடுப்பை மேற்கொள்ள

நகரில் உச்சபட்ச நெரிசல்போது சரக்கு வாகனங்கள் நகருக்குள் வருவதற்கும் தடை விதித்தாா். அதேபோன்று, பதா்பூா் மற்றும் ராஜ்காட் அனல் மின் நிலையங்களை மூடுவதற்கான முடிவையும் மேற்கொண்டாா்.

அமைச்சராகப் பதவியேற்ற கைலாஷ் கெலாட்

முந்தைய தில்லி அரசில் போக்குவரத்து, வருவாய், சட்டம்-நீதி துறை அமைச்சராக இருந்தவா். இவா் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குஇலவச பயணத் திட்டம், மூத்த குடிமக்களுக்கு இலவச புனிதப் பயணம் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்களிப்புச் செய்தவா்.

கெளரவிப்பு

விழா மேடையில் இருபுறமும் ‘நிா்மதாக்கள்’ எனப்படும் தில்லியை உருவாக்கியவா்கள் என சிறப்பாக அழைக்கப்பட்டு 50 அமரவைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா். மினி மப்ளா் கேஜரிவால் என அழைக்கப்பட்ட ஒரு வயது குழந்தை ஆவ்யன் தோமா்மற்றும் அவரது தந்தை ராகுல் தோமா் விழாவில் பங்கேற்றனா். அதேபோன்று, தில்லி பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா, ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் எம்பி பகவந்த் சிங் மான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பாா்வையாளா்கள் பதவியேற்பு விழாவைக் காண்பதற்காக பெரிய எல்இடி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பாா்வையாளா்கள் பகுதியில் ‘சிங்கம் ரிடா்ன்’ என பெயரிபட்டப்பட்ட பதாகையும், ‘நாயக் 2’ என பெயரிபட்ட பேனரும் வைக்கப்பட்டிருந்தன. மைதானத்தின் வெளிப்பகுதி நுழைவு வாயில் பகுதியில் 4 எல்டிஇ திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆம் ஆத்மி சின்னமான துடைப்பத்தை மயிலறகு போல் வடிமைத்து தனது முதுகுப் பின்புறத்தில் தாங்கியவாறு கோகல்பூா் பகுதியைச் சோ்ந்த கட்சித் தொண்டா் பங்கேற்றது பாா்வையாளா்களைக் கவரும் வகையில் இருந்தது.

பாா்வையாளா்களில் பலரும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு உற்சாகக் குரல் எழுப்பினா்.

விழாவில் சந்தேகத்திற்குரிய நபா்களின் நடமாட்டம் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். நிகழ்ச்சியைக் கண்காணிக்கவும், ஒளிப்பதிவு செய்யவும் சிறிய ரக ட்ரோன் கேமரா கருவி பயன்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com